சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16 புலிகள் மரணம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி ஆகும். கடந்த சில ஆண்டுகளாக புலிகள் வாழ்விடத்தை அழித்து அவற்றை வேட்டையாடியதால் புலிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே, புலிகளை பாதுகாக்க உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. புலிகளை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது.
ஆனாலும், புலிகள் வேட்டையாடப்படுவது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. சில மாதங்களுக்கு நீலகிரியில் புலி வேட்டையில் ஈடுபட்ட வட இந்திய பவாரிய கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16 புலிகள் மரணம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மக்களவையில் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். இதன்படி 2020-ம் ஆண்டு 8 புலிகள், 2021-ம் ஆண்டு 4 புலிகள், 2022-ம் ஆண்டு 3 புலிகள், 2023-ம் ஆண்டு 1 புலி என்று மொத்தம் 16 புலிகள் மரணம் அடைந்துள்ளன.
இது குறித்து தமிழக வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழகத்தில் இயற்கைக்கு மாறாக புலிகள் மரணம் அடைவது குறைந்து வருகிறது. பெரும்பாலான புலிகள் முதுமை காரணமாகவும், நோயால் பாதிக்கப்பட்டும், புலிகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில்தான் மரணம் அடைகின்றன. இதன்படி 14 புலிகள் இதுபோன்ற இயற்கை காரணங்களால்தான் மரணம் அடைந்துள்ளன" என்றார்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, நெல்லை மாவட்டம் களக்காடு -முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் - சத்திய மங்கலம் என்று மொத்தம் 4 புலிகள் காப்பங்கள் உள்ளது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின் தமிழகத்தில் 267 புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.