சுற்றுச்சூழல்

செங்கல்பட்டு நீர்நிலைகள் வறண்டு வருவதால் விலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை

கோ.கார்த்திக்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டத்தின் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே வறண்டதால், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுகுன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் காப்புக்காடு உட்பட வனப்பகுதிகள் மற்றும் மலைகள் அமைந்துள்ளன. இங்கு, சிறுத்தை, மான் இனங்கள், கழுதை புலி, நரி, மயில், காட்டுப்பூனை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக, வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின. மேலும், விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக கசிவுநீர் குட்டை மற்றும் குடிநீர் தொட்டிகளை வனப்பகுதிக்குள் வனத்துறை ஆங்காங்கே அமைத்ததால், வன விலங்குகளுக்கு தட்டுப்பாடுன்றி தண்ணீர் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. மேலும், வனப்பகுதிகளில் உள்ள கசிவுநீர் குட்டைகள் உட்பட வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

இதனால், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை வனத் துறை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, "வறட்சியால் மான்கள்தண்ணீர் தேடி கிராமப்பகுதி களுக்கு வருகின்றன. அப்போது, வாகனங்கள் மோதியும் மற்றும் நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை உள்ளது. அதனால், வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர்நிரப்பும் பணிகளை வனத்துறையினர் தொடங்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மழையளவு குறைந்து காணப்பட்டதால், பிப்ரவரி மாதத்திலேயே வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படும். அப்போது, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கப் படும்.

வறட்சி ஏற்படும்: ஆனால், கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்ததால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. அதனால், தற்போதுதான் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதிகளில் இனி வரும் நாட்களில் வறட்சி ஏற்படும். எனவே, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT