நாகை மாவட்டம் பட்டினச்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் 
சுற்றுச்சூழல்

நாகை கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்: மார்ச் 16-ல் ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கலந்த விவகாரம் குறித்து வரும் மார்ச் 16ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பட்டினச்சேரி பகுதியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கச்சா எண்ணெய் கலந்த பகுதிகளில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது, "கடந்த மார்ச் 10ம் தேதியன்று சிபிசிஎல் நிர்வாகம், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

அப்போது, குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவானது. அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், வருவாய்த்துறை மற்றும் மீன்வளதுறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல் துறை உள்பட அனைத்து துறைகளின் அதிகாரிகளோடு, இந்தப் பகுதியைச் சேர்ந்த தாலுகா மீனவர்கள் மற்றும் சிபிசிஎல் நிறுவனத்துடன் சேர்ந்து வரும் மார்ச் 16ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படும் வரை, சிபிசிஎல் நிர்வாகம் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT