உதகை: நீலகிரி மாவட்டம் உதகை மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏரி, ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரி ஆரம்ப காலத்தில் குடிநீருக்காக பயன்பட்டு வந்தது.
காலப்போக்கில் கோடப்பமந்து கால்வாய் வழியாக அதிக அளவு கழிவுநீர் வந்ததால், இந்த ஏரி நீர் மாசடைந்தது. இந்த ஏரி நகராட்சி நிர்வாகம், சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறை மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த ஏரியில் உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. வார நாட்களில் ஒரு நாளைக்கு 5000 பேரும், வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
நகரின் மையப்பகுதி வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருவதால், கோடப்பமந்து கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. அவை, ஏரியின் நுழைவுவாயில் பகுதியில் சேகரமாகிறது. இதேபோல, ஏரியில் சகதி அளவு அதிகமாக இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் ஏரிக்குள் செல்ல முடியாமல் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் சாலையில் தேங்கி நிற்கிறது.
2019-ம் ஆண்டு பொதுப்பணித்துறை மூலமாக, ரூ.60 லட்சம்மதிப்பீட்டில் மண் திட்டுகள் அகற்றும் பணி நடைபெற்றது. தற்போதும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் இதர குப்பை கலந்து, மண் திட்டுகள்வெளியில் தெரிகிறது. எனவே, அவற்றை மீண்டும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, "சமீபத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்புப்படி, உதகை ஏரியில் மட்டும் 26 வகை பறவை இனங்கள், 600 பறவைகள் காணப்பட்டன. இதில் ஆற்று உள்ளான், தட்டை வாயன், புள்ளிமூக்கு வாத்து உட்பட 13 வகையான பறவைகள் வெளிநாட்டை சேர்ந்தவை என்பது சிறப்பம்சம்.
உதகை ஏரியில் கோடப்பமந்து கால்வாய் வழியாக மழை நீரை தாண்டி கழிவு நீரும் அதிக அளவில் வருகிறது. இதனால், டன் கணக்கில் குப்பை சேகரமாகிறது. தற்போது நீர் அளவு குறைந்து, ஏரியின் பெரும்பகுதி வறண்டுள்ளது. ஏரி படுகையில் இருந்து அதிகமாக சேகரமாகியுள்ள மண் மற்றும் குப்பையை சேகரிக்க முடியும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் மண் மற்றும் குப்பையை விரைந்து நீக்குவதன் மூலமாக, பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்" என்றனர்.தண்ணீர் குறைந்து காணப்படும் உதகை ஏரி.