சுற்றுச்சூழல்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 48: நீரை ஓட, நிற்க, உட்கார வைத்தால்...

பாமயன்

உண்மையில் நீர் வானிலிருந்து கிடைக்கிறது, நிலத்திலிருந்து அல்ல.

பண்ணை ஒருங்கமைப்பில் புறஆற்றல்களைக் கையாளும் நோக்கில் வெயிலின் நகர்வு, காற்றின் வீச்சு, நீரின் வரத்து, நிலத்தின் சாய்வு என்ற காரணிகள் அடிப்படையாக உள்ளதைப் பார்த்தோம். நீரைப் பொருத்த அளவில் வானிலிருந்து நேரடியாகப் பண்ணைக்குள் கிடைக்கும் மழை நீர், பண்ணைக்கு வெளியில் பெய்யும் மழையால் வரும் வெள்ள நீர் ஆகிய இரண்டு முறைகளில் தண்ணீர் கிடைக்கிறது.

இந்த இரண்டு நீர் ஆதாரங்களையும் மிகச் செம்மையாகப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் பயன்படுத்தப்பட்ட நீரை முடிந்தவரை மறுசுழற்சியும் செய்துவிட வேண்டும். நமது பண்ணைக்குள் வரும் ஒவ்வொரு சொட்டு நீரும் மிகவும் இன்றியமையாதது என்பதை மறக்கக்கூடாது.

எனவே நீரின் வரத்தும் போக்கும் வரையறை செய்யப்பட வேண்டும். இதற்கு நிலத்தின் சாய்மானம் எப்படி உள்ளது என்று கவனிக்க வேண்டும். நீர் எப்போதும் உயரத்தில் இருந்து பள்ளத்தை நோக்கியே செல்லும். அதற்கேற்றவாறு நமது நிலத்தை வடிவமைக்க வேண்டும். குறிப்பாகச் சமமட்டக் கோடுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு நிலத்தைப் பொருத்த அளவில் சமமட்டக் கோடுகள் என்பவை கடல் மட்டத்திலிருந்து ஒரே உயரத்தில் வரையப்படும் கோடுகள். குறிப்பாகச் சாய்வும் சரிவும் உள்ள நிலப்பகுதியில் இந்தக் கோடுகள் முதன்மை பெறுகின்றன. இந்தக் கோடுகளை வரைந்து கொண்ட பின்னர் அதன் வழியாகக் கரைகளையோ, வாய்க்கால்களையோ அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும்போது மழை நீர் நமது மண்ணைச் சிதைக்காமல் சீராக ஓடும். மண் அரிமானமும் ஏற்படாது.

திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் கால்வாய் மிகச் சிறந்த சமமட்டக் கோட்டு வாய்க்கால். சோழர்களின் இந்த அரிய சாதனை வியப்புக்குரியது.

ஒரு நிலத்தின் சமமட்டக் கோடுகளைக் கண்டறிய ‘ப’ வடிவத்தில் கொத்தனார் பயன்படுத்தும் அளவைக் குழாய்களைப் (டியுப்) பயன்படுத்தலாம் அல்லது தலைகீழாகப் புரட்டப்பட்ட கவட்டைக் கம்புகளையும் பயன்படுத்தலாம். இப்போது தொகைநோக்கி வடிவ குழாயுடன் கூடிய கருவிகள் வந்துவிட்டன. இவற்றின் மூலமாக தொடர்ச்சியாக சமமட்டப் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை இணைத்தால் கிடைப்பது சமமட்டக் கோடுகள். அந்தக் கோடுகளின் மீது அமைக்கப்படும் வரப்புகள் சமமட்ட வரப்புகள், வாய்க்கால்களாக இருந்தால் அவை சமமட்ட வாய்க்கால்கள் எனப்படும்.

அகழிப் பண்ணையம் எனப்படும் தொடர் அகழிகளை உருவாக்கி, அதற்கிடையில் சாகுபடி செய்யும் முறையில் சமமட்ட வாய்க்கால் மிகவும் பயன்படும். இருபது அல்லது இருபத்தைந்து அடி இடைவெளியில் வரிசையாக அகழிகளை அமைத்து, அதன் இரு கரைகளிலும் மரங்களை நடவு செய்யலாம். அதற்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் மானாவாரி சாகுபடி செய்யலாம். இதன் மூலம் நீர் மிகச் சிறப்பாக மண்ணுள் இறங்கும். ஓடும் நீரை நடக்க வைத்தலும், நடக்கும் நீரை நிற்க வைத்தலும், நின்ற நீரை அமர வைத்தலும் பண்ணை ஒருங்கமைவில் முதன்மை பெறும். கால்வாய்களில் நீர் ஓட வேண்டும், குளங்களில் நீர் நிற்க வேண்டும், மண்ணடியில் நீர் அமர வேண்டும்.

(அடுத்த வாரம்: ஒவ்வொரு சொட்டையும் மறுசுழற்சி செய்யலாம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT