தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதமாக மின் வேலி அமைந்திருந்த விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த யானையுடன் சுற்றி வந்த ஒற்றை ஆண் யானை கிராமங்கள், விளைநிலங்களில் அவ்வப்போது நுழைவதும், வனத்துக்குள் செல்வதுமாக உள்ளது.
மேலும், மாரண்டஅள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 ஆண் என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன. யானைகள் கிராமத்துக்குள் நுழையாதபடி நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன்தினம் இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வந்தன.
யானைகள் மின்வேலியில் சிக்கிய தகவல் அறிந்த உதவி வனப் பாதுகாவலர் வின்சென்ட், தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உள்ளிட்டோர் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அப்பகுதியிலேயே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு யானைகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
மேலும், விவசாய நிலத்துக்கு சட்ட விரோதமாக மின் வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசன் (50) என்பவரை பாலக்கோடு போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 குட்டி யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குட்டி யானைகளை, யானைகள் கூட்டத்துடன் சேர்க்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கினர். பின்னர் இந்த வழக்கை வனப்பாதுகாப்பு மற்றும் யானைகள் வழித்தட மீட்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.