சுற்றுச்சூழல்

முதுமலையில் விலங்குகளின் தாகத்தை தணிக்க வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறை

செய்திப்பிரிவு

முதுமலை: முதுமலையில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இதையடுத்து, அவற்றின் தாகத்தை தணிக்க வனக்குட்டைகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்துவிட்டன. இங்குள்ள தேக்கு மரங்கள், இலைகள் காய்ந்து உதிர்ந்து எலும்புக் கூடுகளாக காணப்படுகின்றன.

தாவரங்கள் இல்லாததால் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. வறட்சி காரணமாக வனங்களில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால், வனத்தீ ஏற்படாமல் இருக்க 500 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்புக் கோடுகளை வனத்துறையினர் அமைத்து வருகின்றனர். மேலும், விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், முதுமலை வனப்பகுதியில் குட்டைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த குட்டைகளில் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விலங்குகளுக்கு உப்பு கொட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, "முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி, தெப்பக்காடு, சீகூர், சிங்காரா, மசினகுடி வனச் சரகங்களிலுள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

தண்ணீர் தீர்ந்ததும், மீண்டும் தண்ணீர் நிரப்பப்படும். எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேவை என வன ஊழியர்கள் கூறுகிறார்களோ, அப்பகுதிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படும்" என்றனர். இதற்கிடையே, முதுமலையில் வறட்சி மேலோங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து வெறிச் சோடி காணப்படுகிறது.

SCROLL FOR NEXT