தருமபுரி மாவட்டம் தொப்பூர் காப்புக்காட்டில், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். 
சுற்றுச்சூழல்

தொப்பூர் காப்புக்காட்டில் கோடை காலத்தையொட்டி 19,000 மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் வனத்துறையினர்

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி வனக்கோட்டம் தருமபுரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தொப்பூர் காப்புக் காட்டில் மரங்கள் அடர்த்தியின் தரம் குன்றிய பகுதியில் 38 ஹெக்டேர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு, கடந்த மழைக் காலத்தின் போது 19 ஆயிரம் எண்ணிக்கையில் பல்வேறு ரக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மரக்கன்றுகளை உயிரிழப்பில் இருந்து காக்கும் வகையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை மேற்கொள்ள மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து தருமபுரி வனச்சரக அலுவலர் அருண் பிரசாத் ஒருங்கிணைப்பில் டேங்கர் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மூலம் வனப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் 10 வனப் பணியாளர்கள் முன்னிலையில் 30 தொழிலாளர்கள் ஒவ்வொரு மரக் கன்றுக்கும் 20 லிட்டர் வீதம் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

கோடை காலம் முடியும் வரை அல்லது கனமழை கிடைக்கும் வரை இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT