நீண்ட போராட்டத்துக்குப் பின் லாரியில் ஏறிய மக்னா யானை. படங்கள்: ஜெ.மனோகரன் 
சுற்றுச்சூழல்

பேரூர் அருகே 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை

செய்திப்பிரிவு

கோவை: ஐந்து மணி நேர போராட்டத்துக்குப் பின் கோவை பேரூர் அருகே நேற்று மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வரகளியாறு வனப்பகுதியில் கடந்த 6-ம் தேதி விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், வனத்தை விட்டு கடந்த 20-ம் தேதி இரவு வெளியேறிய யானை, கோவை மாநகருக்குள் நுழைந்தது.

குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் இருந்த யானை, நேற்று காலை செல்வபுரம், தெலுங்குபாளையம் வழியாக பேரூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள தனியார் கல்லூரி அருகே ஆற்றுப்படுகைக்கு சென்று படுத்துக் கொண்டது.

யானையை கண்காணிக்கும் பணியில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் எஸ்.ராமசுப்பிரமணியம் தலைமையில், துணை இயக்குநர் பார்கவ் தேஜா, உதவி வனப் பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனச்சரகர்கள், வனப் பணியாளர்கள், சிடபிள்யுசிடி, என்சிஎஸ் அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

அதோடு, வன கால்நடை மருத்துவர்கள் சுகுமார், மனோகரன், பிரகாஷ், சதாசிவம் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி யானை சென்றால் பிரச்சினை ஏற்படும் என்பதால் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியின் போது உதவுவதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை சின்ன தம்பி லாரி மூலம் காலை 10 மணிக்கு வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டது.

அதோடு, 3 ஜேசிபி இயந்திரங்கள், ஒரு கிரேன் வரவழைக்கப்பட்டது. பிடிபடும் யானையை அழைத்துச் செல்ல ஓசூர் வனக் கோட்டத்தில் இருந்து பிரத்யேக வாகனம் கொண்டுவரப்பட்டது. கால்நடை மருத்துவ குழுவினரின் திட்டமிடலுக்கு பின், மதியம் 2 மணியளவில் நொய்யல் ஆற்றுப் படுகையில் இருந்த யானையை பட்டாசுகள் வெடித்து ஒருபக்கமாக வனத்துறையினர் விரட்டினர்.

அப்போது, ஜேசிபி இயந்திரத்தில் இருந்த கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்த முயன்றனர். முட்புதரில் இருந்து வெளியேறிய யானை ஜேசிபி இயந்திரத்தை தாக்க வந்து பின்வாங்கியது. பின்னர், மீண்டும் பட்டாசுகளை வெடித்தபோது யானை முட்புதரை ஒட்டியிருந்த வாழை தோட்டத்துக்குள் நுழைந்தது.

பின்தொடர்ந்து சென்ற வன கால்நடை மருத்துவர்கள் மாலை 4.10, 4.32, 4.40 மணி என மூன்று முறை மயக்க ஊசிகளை செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியபிறகு, யானையின் வேகம் குறைந்து வாழைத்தோட்டத்தின் நடுப்பகுதிக்கு சென்று நின்றுகொண்டது. பின்னர், வாகனத்தில் ஏற்ற வசதியாக மக்னா யானையின் கால்கள், கழுத்துப் பகுதியில் பெரிய கயிறுகளை கொண்டு வனப் பணியாளர்கள் கட்டினர்.

வாழைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த வாழை மரங்கள் அகற்றப்பட்டு, மாலை 6.16 மணிக்கு கும்கி யானை சின்ன தம்பி உதவியுடன் லாரியில் ஏற்ற வனப்பணியாளர்கள் முயன்றனர். ஆனால், யானை நகரவில்லை. பின்னர், கயிறுகொண்டு இழுத்தும், கும்கி யானை பின்னால் உந்தித்தள்ளியதாலும் மெதுவாக நகர்ந்த மக்னா யானை, கடைசியில் மாலை 6.49 மணிக்கு லாரியில் பாதுகாப்பாக ஏறியது.

ஏறியபிறகு யானை மிரண்டதால் மீண்டும் ஒருமுறை யானைக்கு மயக்கஊசி செலுத்தப்பட்டது. யானையை அழைத்துச் செல்லும் போது மின் வயர்கள் அதன் மீது பட்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மக்னா யானை வெளியே அழைத்து வரப்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க கழுத்துப் பகுதியில் நேற்று ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

டபிள்யுடபிள்யுஎஃப் அமைப்பு சார்பில் வனத்துறைக்கு அளிக்கப்பட்ட இந்த ரேடியோ காலரில் உள்ள ஜிபிஎஸ் உதவியுடன் யானையின் நடமாட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க முடியும். சுமார் 3 ஆண்டுகள் வரை சிக்னல்களை அனுப்பும் அளவுக்கு அதன் பேட்டரி திறன் உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT