சுற்றுச்சூழல்

பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் விலங்குகளின் தாகம் தீர்க்க வனத் துறையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோடை வெயில் தொடங்கியுள்ளதால், பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, உடுமலை, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி ஆகிய 6 வனச்சரகங்களில் 300-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள், யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கடமான், புள்ளிமான், வரையாடு, சருகுமான், நீலகிரி மந்தி, சாம்பல் நிறமந்தி, புனுகுபூனை, தேவாங்கு, நீர்நாய், ராஜநாகம், மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன.

இந்தாண்டு பருவமழைக்கு பின்னர் நிலவிய கடும் பனிப்பொழிவு மற்றும் கோடை வெயில் தொடங்கியுள்ளதால் வனத்தில் மரம், செடி, கொடிகள் காய்ந்து கடும் வறட்சி நிலவுகிறது. காய்ந்த புற்களால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதியில் உள்ள சின்னாறு, புங்கன் ஓடை உள்ளிட்ட ஊற்றுகள், நீரோடைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால், யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீரைத் தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன. வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக மழைக்காலங்களில் சிற்றோடைகளில் வரும் நீரை சேமித்து வைக்கும் தடுப்பணைகள் மற்றும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தொட்டிகள் நீரின்றி கிடப்பதால் வன விலங்குகள் அணை மற்றும் ஓடைகளைத் தேடி வர வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் வரும் வாய்ப்பும் உள்ளது.

இதனை தவிர்க்க வனப்பகுதியில் நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், உலாந்தி மற்றும் பொள்ளாச்சி வனப்பகுதியில் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘பொள்ளாச்சி மற்றும் உலாந்தி வனச்சரகத்தில் 7 தரை மட்ட தொட்டிகளுக்கு தேவைக்கு ஏற்ப டிராக்டர் வாயிலாக தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு, நிரப்பப்படுகிறது. இதனால் கோடை காலத்தில் வன விலங்குகளின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுவதால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவது தவிர்க்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT