நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளைக் கொன்ற சிறுத்தையை உயிருடன் பிடிக்க மசினகுடி ‘ஆட்கொல்லி’ புலியை பிடித்த முதுமலை வனக்காப்பாளர்கள் வந்துள்ளனர்.
பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சுடையாம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. மேலும், சிறுத்தை அங்குள்ள ஆடு, மாடு மற்றும் நாயைக் கொன்றது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் இரு இடங்களில் கூண்டு மற்றும் 10 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உத்தரவின் பேரில், வனச்சரகர், வனவர் தலைமையில் 46 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், சிறுத்தையை பிடிப்பதில் வனத்துறையினருக்குச் சவாலாக இருந்து வருகிறது. அதே நேரம் கிராம மக்கள் சிறுத்தைக்குப் பயந்து வீடுகளில் முடங்கும் நிலையுள்ளதால், விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளைக் கண்டறியும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதுமலை வனக் காப்பாளர்கள் மீன்காலன், பொம்மன் ஆகிய இருவர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பரமத்திவேலூர் வனத்துறையினருடன் சேர்ந்து சிறுத்தையைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வனக்காப்பாளர்கள் மீன்காலன், பொம்மன் ஆகிய இருவரும் முதுமலை மசினகுடியில், கடந்தாண்டு 4 பேரைக் கொன்ற, 'டி-23' என்ற ‘ஆட்கொல்லி’ புலியை உயிருடன்பிடித்து புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் விருது வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.