தார் கலவை இயந்திர ஆலைகள் | கோப்புப் படம் 
சுற்றுச்சூழல்

நீலகிரியில் சட்ட விரோத தார் கலவை இயந்திர ஆலைகள்: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நீலகிரியில் சட்ட விரோதமாக இயங்கும் தார் கலவை இயந்திர ஆலைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த ராமானுஜம் தாக்கல் செய்த மனுவில், “நீலகிரி மாவட்டம் தேவாலா அருகே கலவை இயந்திரங்களை பயன்படுத்தபடுத்தி சூடான தார் கலவைகள் உருவாக்கபடுகிறது. இந்த சூடான கலவையை இரண்டு தனியார் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.

2-வது கலவை ஆலையை நிறுவ தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எவ்வித அனுமதியும் பெறமால், சட்டவிரோதமாக ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆலைகள் மூலம் சுற்றுசூழல் பாதிக்கபடுகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் அருகில் உள்ள கிராமங்களின் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது. காற்று மாசடைந்து பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த இரண்டு ஆலைகளும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை மீறி செயலபடுகிறது. விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்ககோரி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொது மக்களுக்கு உடல் நலக்கேடு விளைவிக்கும் தார் கலவை இயந்திர ஆலையை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சுற்றுசூழல் மற்றும் வனத் துறை செயலாளரும், நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT