கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நீலாம்பதி வனப்பகுதியில் இருதய அதிர்ச்சியால் பெண் யானை உயிரிழந்தது. கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம், நீலாம்பதி சரகப்பகுதியில் பெண் யானை ஒன்று இறந்துகிடந்தது.
இதையடுத்து, கோவை வன கால்நடை மருத்துவ அலுவலர் ஏ.சுகுமார் தலைமையில் உடற்கூராய்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து, சுகுமார் கூறும்போது, “இறந்த யானைக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். யானையின் சிறுகுடல், பெருங்குடலில் எந்த உணவும் இல்லை. யானை சில நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது.
சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை வெளிரிப்போயிருந்தன. யானைக்கு அதிதீவிர ரத்தசோகை இருந்துள்ளது.
இதன்காரணமாக தசைகள் வலுவிழந்து மார்பு பகுதி தரையில் படுமாறு முன்பக்கமாக விழுந்து, இருதய அதிர்ச்சி ஏற்பட்டு யானை உயிரிழந்துள்ளது” என்றார்.