சுற்றுச்சூழல்

உக்கடம் பெரியகுளத்தின் கரையில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு

செய்திப்பிரிவு

கோவை: சுவிட்சர்லாந்து நாட்டின் நிதியுதவியுடன், நமக்கு நாமே திட்டத்தில், உக்கடம் பெரியகுளத்தின் கரையில் ‘மிதக்கும் சூரியஒளி மின்உற்பத்தி நிலையம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணிகுளம் உள்ளிட்ட குளங்களை மேம்படுத்துதல், மாதிரி சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சியின் சார்பில் உக்கடம் புல்லுக்காடு, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் ‘சோலார் பிளான்ட்’ எனப்படும், சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக வெளிநாடுகளில் இருப்பதை போல, உக்கடம் பெரியகுளத்தில் மிதக்கும் சூரியஒளி மின்உற்பத்தி நிலையத்தை சுவிட்சர்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் அமைக்க மாநகராட்சியின் சார்பில் திட்டமிடப்பட்டது. இதன்படி, ரூ.1.10 கோடி மதிப்பில் 140 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட மிதக்கும் சூரியஒளி மின்உற்பத்தி நிலையம் பெரியகுளத்தில் அமைக்கப்பட உள்ளது.

இதில் 50 சதவீதம் பங்களிப்பாக சுவிட்சர்லாந்து ரூ.55 லட்சத்தை வழங்குகிறது. மீதம் உள்ள 50 சதவீதம் தொகையை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பெற்று திட்டப்பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் தலைமை வகித்தனர். சுவிஸ் வளர்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநரும் தூதருமான கிறிஸ்டியன் ப்ருட்டிகர் தலைமையிலான குழுவினர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தலைவர் ஆலிவர் பிங்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சுவிட்சர்லாந்து நாட்டின் தூதரகம் இந்தியாவில் 8 நகரங்களை தேர்வு செய்து ‘கெப்பாசிட்டீஸ் ப்ராஜெக்ட்’ என்ற திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கோவை பாரதிபார்க் பகுதியில்1.5 டன் அளவு கொண்ட ‘பயோகேஸ்’ திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்டமாக உக்கடம் பெரியகுளத்தில் மிதவை சூரியஒளி மின்உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய சுவிட்சர்லாந்து நாட்டு குழுவினர் பெரிய குளத்தில் ஆய்வு செய்தனர்” என்றனர்.

SCROLL FOR NEXT