மதுரை; சாமநத்தம் கண்மாய் மதுரை மாவட்டத்தின் முதல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக உலக ஈர நிலங்கள் தின விழாவில் பறவையியல் ஆய்வாளர் ரவீந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் சார்பில், மதுரை சாமநத்தம் கண்மாயின் அருகில் உள்ள சேர்மத்தாய் மகளிர் கல்லூரியில் உலக ஈர நிலங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ரவீந்திரன் நடராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியது: "உலகெங்கிலும் உள்ள பல்வேறு சூழல்களில் ஈர மற்றும் சதுப்பு நிலங்கள் உள்ளன. மேலும், அவை அனைத்தும் வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவை அனைத்திற்கும் பொதுவான பண்பும், பயனளிப்பும் உள்ளது. அவை வளமான பல்லுயிர் பெருக்கத்தின் மிக முக்கியமான வாழ்விடங்கள், மற்றும் மனிதர்கள் மற்றும் மனிதர்களின் தேவைகளுக்கான கால்நடைகளின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஈரநிலங்கள் இயற்கையான சிறந்த வடிகட்டிகள். அவை வண்டல்களைப் சேகரித்து மாசுபடுத்திகளை அகற்றுகின்றன, மாசடைந்த கலங்கிய தண்ணீரை சுத்திகரிக்க இவை உதவுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை வடிகட்டுதல் அமைப்புகளை விட இவைகள் சிறப்பாக பயனளிக்கின்றன. ஈரநிலங்கள் ஒரு பஞ்சினைப் போல நீரை உறிஞ்சி மண்ணை ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் அவை தண்ணீரைச் சேமித்து, பின்னர் மெதுவாக வெளியிடுகின்றன, எனவே மழை இல்லா வறண்ட காலங்களைச் சமாளிக்க உதவுகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஈர நிலங்கள் மிகுதியான நீரை உள் வாங்கி வெள்ளத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும்.
இந்நிலங்களில் சேகரிக்கப்படும் நீரின் அளவால், தொடர்ந்து அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் செரியூட்டப்படும். எனவே கிராமப்புறங்கள் மட்டும் அல்லாது புறநகர் பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் ஈர நிலங்கள் காப்பாற்றப் படவேண்டும்.
ஈரநிலங்களின் சுற்றி பல்லுயிர் பெருக்கம் அதிகமாக உள்ளது. இந்த பகுதிகள் பல உயிரினங்களுக்கு உணவு மற்றும் வாழ்விடத்தை வழங்குகின்றன. குறிப்பாக மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, நீர்வாழ்ப்பறவைகள், மற்றும் எண்ணற்ற பாலூட்டிகளுக்கு தேவையான நீரையும் பெற்றுத் தருகிறது. ஈர நிலங்கள் மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான புல்வெளியை தருகிறது.
எனவே, மனிதர்களின் கால்நடை வளர்ப்பிற்கு இவைகள் பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஈர நிலங்களைச் சுற்றி பெரும் உணவு சங்கிலி வளையம் உள்ளது. எனவே இப்பகுதிகள் காக்கப்படும் போது இயற்கையின் நிலைத்தன்மை உறுதிப்படுகிறது.
மதுரையை சுற்றிலும் உள்ள நீர் நிலப்பகுதிகள் அனைத்தும் பெருகி வரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு அரசால் காக்கப்பட வேண்டும். சாமநத்தம் கண்மாயில் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள பறவையினங்களை பற்றி அறிந்து அப்பகுதி அரசால் மதுரை மாவட்டத்தின் முதல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படவேண்டும். அதற்கான வாய்ப்புகள் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.