சென்னை: எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க விரைவில் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஓய்வுபெற்ற, நோய்வாய்ப்பட்ட யானைகளை பராமரிப்பதற்காக 2019-ல் திருச்சி பெரம்பலூர் சாலையில் உள்ள, எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட யானைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர்.
அங்கு முழு நேர யானைகள் மருத்துவ நிபுணர்கள் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அங்குள்ள 7 யானைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவதால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்து அதன் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நேரில் ஆய்வு செய்த வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த அறிக்கை தமிழ்நாடு அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், யானைகள் மறுவாழ்வு மையத்தில் தரையில் மணல் கொட்டப்படவேண்டும். யானைகளை முறையாக குளிக்கச் செய்வதற்காக சிறிய குளங்கள் ஏற்படுத்த வேண்டும். முழு நேர கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அஷ்ட சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 18 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.
அப்போது மனுதாரர், இந்த பரிந்துரைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. போதுமான தண்ணீர் வசதி உள்ளிட்டவை இல்லாததால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முதுமலைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அப்போது தமிழக அரசுத்தரப்பில், வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். விரைவில் எம்.ஆர்.பாளயைம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கால்நடை மருத்துவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உரிய வசதிகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விரைவில் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒரு மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.