சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள், கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்புகளின் போது கிடைக்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய சூரிய வெப்ப ஆற்றலை உள்ளடக்கிய சுத்திகரிப்பு முறையை உருவாக்கி உள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுக் கான்கிரீட்டை, சூரிய கதிர்வீச்சைப் பயன்படுத்தி வெப்பமடையச் செய்து மறுசுழற்சி கான்கிரீட்டை (Recyled Concrete Aggregae) உற்பத்தி செய்கின்றனர். இயந்திரங்களைக் கொண்டு நொறுக்குவதைக் காட்டிலும் இதன் தரம் அதிகமாகும். வழக்கமான கட்டமைப்புகளுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத் தரத்துடன் இந்த கான்கிரீட் தயாரிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் தலைமையகமான சாந்திவனத்தில் உள்ள இந்தியா ஒன் சோலார் தெர்மல் பவர் பிளாண்ட்டில் (India One Solar Thermal Power Plant) இதற்கான செயல்விளக்கம் நடைபெற்றது.
அதிக அழுத்தத்தில் கிடைக்கும் நீராவியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்காக இங்கு 770 சூரியஒளி செறிவூட்டிகள் உள்ளன. 2017-ம் ஆண்டு முதல் இயங்கிவரும் இந்த ஆலையில் இருந்து, இதே பகுதியில் உள்ள 25,000 பேருக்கு நியாயமான கட்டணம் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுடன் மின்சாரம் வழங்கப்படுகிறது. கான்கிரீட் கழிவுகளை சுத்திகரிக்கும் முழு அளவிலான சோதனைகளுக்காக இரண்டு செறிவூட்டிகள் பயன்படுத்தப்பட்டன.
வெப்பமாக்கலுக்கு செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், கான்கிரீட் கழிவுகள் தெர்மோ-மெக்கானிக்கல் செறிவாக்கம் செய்யப்பட்டு உயர்தரமான மறுசுழற்சிப் பொருளாகக் கிடைக்கிறது.
கான்கிரீட்டில் புளூ மெட்டல், மணல் ஆகியவற்றுக்கு மாற்றாக இவற்றைப் பயன்படுத்தலாம். இந்த முன்னோடி ஆய்வில், இடிப்புத் தளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கான்கிரீட்டை, செறிவூட்டப்பட்ட சூரிய கதிர்வீச்சைப் பயன்படுத்தி, பிரதிபலிப்பான்கள், வார்ப்பிரும்பு மூலம் 550 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையில் சூடாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இயந்திரம் மூலம் அவை மறுசுழற்சி கான்கிரீட்டாக மாற்றப்பட்டது.
இந்த ஆய்வில் கிடைக்கப் பெற்ற முடிவுகள் புகழ்பெற்ற, மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் Materials and Structures வெளியிடப்பட்டுள்ளது. ரோஹித் பிரஜாபதி, சுரேந்தர் சிங், பி.கே.ஜெய்சிம்ம ரத்தோர், பேராசிரியர் ரவீந்திர கெட்டு ஆகியோர் இந்த ஆய்வுக் கட்டுரையை இணைந்து எழுதியிருந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து ஐஐடி மெட்ராஸ்-ன் சிவில் என்ஜினியரிங் துறை வி.எஸ்.ராஜு ஆராய்ச்சிப் பேராசிரியரான பேரா. ரவீந்திர கெட்டு கூறுகையில், “சூரியக் கதிர்வீச்சைக் கொண்டு தெர்மோமெக்கானிக்கல் செறிவாக்க முறையில் கழிவு கான்கிரீட்டுகளை நல்ல தரமுள்ள மறுசுழற்சிப் பொருளாக மாற்றி புதிய கான்கிரீட் தயாரிப்புக்கு வழங்க முடியும் என்பதை நிரூபிப்பதுதான் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
கழிவு கான்கிரீட்டை பெரிய அளவில் மறுசுழற்சி செய்ய செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியும் என்பதற்கான வலுவான ஆதாரங்களை இந்த ஆய்வு வழங்கி உள்ளது. கட்டுமானம், கட்டிட இடிப்புக் கழிவு செயலாக்கத்திற்குத் தேவைப்படும் ஆற்றல் இதனால் கணிசமான அளவுக்குக் குறைகிறது. மூலப்பொருள், மின்சாரம் ஆகியவற்றை சேமிப்பதால் பொருளாதார ரீதியாகவும் நன்மை பயக்கிறது” என்றார்.
மூன்று பிரிவுகள்: இந்த ஆய்வின் நோக்கங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். கான்கிரீட் கழிவுகளில் தெர்மோமெக்கானிக்கல் செயலாக்கத்திற்கு செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றலைப் பயன்படுத்துதல், கழிவுகளில் இருந்து உயர்தர மறுசுழற்சி கான்கிரீட்டை உற்பத்தி செய்தல், மறுசுழற்சி கான்கிரீட்டின் செயல்திறனைமதிப்பிட்டு அதன் மூலம் கான்கிரீட் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை உணர்த்துதல்.
இந்த ஆய்வில் ரிஃப்ளெக்டர் ரிசீவர் அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் 500 டிகிரி செல்சியஸ் அளவுக்குத் தேவையான வெப்பநிலையைக் கிடைக்கச் செய்வதுடன், நீண்ட நேரத்திற்கு அதனைப் பராமரிக்கவும் முடிவும் என்பது தெரிய வந்துள்ளது.