சென்னை: போகிப் பண்டிகையன்று சென்னையில் காற்று தரக் குறியீடு 14 மண்டலங்களில் மிதமான அளவிலும், ஒரு மண்டலத்தில் மோசமான அளவிலும் இருந்ததாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போகிப் பண்டிகையன்று ஏற்பட்ட காற்று மாசு தொடர்பாக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என பவனந்தி முனிவர் நன்னூலில் குறிப்பிட்டதைப்போல நமது முன்னோர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள் மற்றும் தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றைத் தீயிட்டு கொளுத்தி கொண்டாடுவது வழக்கத்தில் இருந்து வந்தது.
அதீத நகரமயமாதலினால் சென்னை போன்ற பெருநகரங்களில் தற்பொழுது போகிப்பண்டிகையின் போது ரப்பர் டயர், டியூப் போன்ற பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து எரிப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் ஏற்படும் புகை மற்றும் மாசினால், புகைப்பனி உருவாகி வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பெரிதும் பாதிக்கிறது. மேலும், இத்தகைய காற்று மாசு, சுவாச நோய், இருமல், கண் எரிச்சல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் புகை மூட்டத்தினால் போக்குவரத்து தடைபடுவதுடன் விபத்துகளும், விமான போக்குவரத்தில் மாற்றங்களும் ஏற்படுகின்றன.
நவீன யுகத்தில் எல்லாப் பொருட்களையும் மறுசுழற்சி செய்து வருமானம் ஈட்டும் விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் போகி தினத்தன்று ரசாயன பொருட்களை எரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்த்து புகையில்லா போகியை கொண்டாடுவது நமது அனைவரது கடமையாகும்.
இதன் அடிப்படையில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த ஆண்டும் போகிப்பண்டிகைக்கு முன்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. இதன் காரணமாக கடந்த வருடங்களை தொடர்ந்து பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது வெகுவாக குறைந்துள்ளது.
இந்தாண்டில் போகிப்பண்டிகையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் 11ம் தேதி முதல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது.
சென்னை மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களிலும் இரண்டு நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஊடகங்கள், சமூக வளைதளங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் மற்றும் பிரச்சார வாகனங்களில் ஒலி பெருக்கி வாயிலாகவும், நடமாடும் காணொலி காட்சி வாகனத்தின் மூலமாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரச்சார ஊர்திகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போகிப்பண்டிகையின் போது சென்னை பெருநகர மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரிய ஆய்வகத்தின் மூலம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் (11.01.2023–12.01.2023) மற்றும் போகிப்பண்டிகை (13.01.2023–14.01.2023) அன்று 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்படி 13.01.2023 காலை 8.00 மணி முதல் 14.01.2023 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு, மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட (24 மணி நேர சராசரி) தர அளவான 80 மைக்ரோகிராம்/கனமீட்டருக்கு உட்பட்டு இருந்தது.
காற்றில் கலந்துள்ள (PM2.5) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 50 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 113 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட PM2.5 24 மணி நேர சராசரி தர அளவு 60 மைக்ரோகிராம்/கனமீட்டர்). மேலும், காற்றில் கலந்துள்ள (PM10) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 148 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் 203 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட PM10 24 மணி நேர சராசரி தர அளவு 100 மைக்ரோகிராம்/கனமீட்டர்).
காற்று தர குறியீடு (Air Quality Index) பொருத்தமட்டில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 135 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 277 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டது. நடப்பாண்டில் (2023) போகிப்பண்டிகையின் போது சென்னை பெருநகர மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்றுத் தர குறியீடு மிதமான அளவுகளிலும், 1 மண்டலத்தில் (வளசரவாக்கம்) மோசமான அளவாக இருந்தது என கண்டறியப்பட்டது. (காற்றுத்தர குறியீட்டு அளவு 135 முதல் 277 வரை).
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை விமான நிலையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு குப்பைகளை எரிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததின்பெயரில் பொது மக்கள் பெருமளவு குப்பைகளையோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகளையோ எரிக்கவில்லை எனவே விமான போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் சேவையில் எந்த தடையும் ஏற்படவில்லை. சென்னை மாநகரில் இன்று (ஜன.14) குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்பநிலை, மிதமான காற்றின் வேகம் காரணமாக புகை மண்டலம் அதிகமாக தென்படவில்லை, இதனால் தொலைதூர காணும் தன்மை (Visibility) நன்றாக இருந்ததால், விமான புறப்பாடு மற்றும் வருகை போக்குவரத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என அறியப்பட்டது.
இந்தளவு காற்று மாசு அளவு குறைந்ததற்கு பொதுமக்களிடையே இருந்த விழிப்புணர்வும், டயர், டியூப், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்காமல் ஒத்துழைப்பு தந்ததும் முக்கிய காரணமாகும். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசு துறையினருக்கும், அரசுசாரா அமைப்பினருக்கும், குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கும், செய்தி மற்றும் ஊடகங்களுக்கும் குறிப்பாக பொதுமக்களுக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.