கான்பூர்: இந்தியாவில் பாறு கழுகுகள் (பிணம் தின்னிக் கழுகு) வேகமாக அழிந்து வரும் நிலையில், அரிய வகை இமாலயன் க்ரிஃபான் எனப்படும் பாறு கழுகு ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பிடிபட்டுள்ளது. பின்னர், அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் உள்ள கர்னல்கஞ்ச் கிராமத்தின் கல்லறைத் தோட்டத்தில் அரிய வகை இமயமலை பாறு கழுகு ஒன்று பிடிபட்டுள்ளது. இந்தக் கழுகு கடந்த ஒரு வாரமாக இந்த இடத்தில் சுற்றி வந்துள்ளது. இது குறித்து உள்ளூர்வாசிகள் கூறும்போது, “இந்தப் பிணம் தின்னி கழுகு ஒரு வாரமாக இங்கேதான் சுற்றித் திரிந்தது. நாங்கள் தொடர்ந்து கழுகைப் பிடிக்க முயற்சி செய்தோம். எங்களால் முடியவில்லை. கடைசியாக அது கீழே வந்து அமர்ந்தபோது அதனைப் பிடித்துவிட்டோம்'' என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கழுகு ஒன்று பிடிபட்டிருப்பது தொடர்பாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தக் கழுகு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கழுகு பிடிபட்டது குறித்து செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள வீடியோவில், எதிரிகளிடம் பிடிபட்ட பெரும் துயரத்துடன், தன்மானம் இழக்காத கம்பீரத்துடனும் இருக்கும் போர் வீரனைப் போல சோர்வாக இருக்கும் கழுகின் இறக்கைகளை உள்ளூர்வாசிகள் எந்த வித எச்சரிக்கை உணர்வுமின்றி வீடியோ படம் எடுப்பதற்காக விரித்துப் பிடித்திருக்கின்றனர்.
இந்த அரிய வகை கழுகு பிடிபட்ட வீடியோ செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய வனப் பணி அதிகாரி, பிரவீன் கஷ்வான், "இது இமாலயன் க்ரிஃபோன் கழுகு போல உள்ளது. இளைய பறைவகள் புலம்பெயர்கின்றன. பெரிய பறவைகள் உயரமான இடங்களில் வசிக்கின்றன. இவை 40 - 45 வயது வரை வாழ்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.
இமயமலையின் திபெத் பீடபூமி பகுதிகளில் அதிகமாக வசிக்கும் இமாலயன் க்ரிஃபோன் வகை பாறு கழுகுகள் அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியிலில், இந்தியாவில் உள்ள 9 பாறு கழுகு இனங்களில் நான்கு அழிவின் விளிம்பில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வன உயிர் பாதுகாப்புச் சட்டம் (1972)-ன் படி பாறு கழுகுகள், அதிகம் பாதுகாப்பட்ட வேண்டிய உயிரினங்களின் பிரிவு 1-ல் பட்டியலிடப்பட்டிருக்கின்றது.
இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த 1990-களில் இருந்துதான் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நேஷனல் ஜியோகரபியின் அறிக்கையின் படி, கடந்த 1990-களுக்கு பின்னர் பாறு கழுகுகள் 99 சதவீதம் அழிந்துள்ளன. இதற்கு காரணம், மாடுகளுக்கு கொடுக்கப்பட்ட டிக்ளோஃபெனாக் என்னும் வலி நிவாரணி மருந்து காரணமாக சொல்லப்படுகிறது. இந்த மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்ட இறந்த மாடுகளின் சடலங்களை சாப்பிட்ட பாறு கழுகுகளுக்கு தீவிரமான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவை அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டன. எந்த நோய் தாக்கிய விலங்குகளின் சடலங்களையும் தின்று செறிக்கும் உடலமைப்பைக் கொண்ட பாறு கழுகுகள் இயற்கையின் தூய்மைப் பணியாளர்கள் என்று அழைப்படுவது குறிப்பிடத்தக்கது.