உதகை: முதுமலையில் 175 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை வனப்பகுதியில் வண்ணத்துப் பூச்சிகள் பரவலாக காணப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு கூடலூர் அருகே பொன்னூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. கடந்த மாதம் 24, 25-ம் தேதிகளில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அனைத்து சரக வனப்பகுதியிலும் முதன்முறையாக வண்ணத்துப் பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.
இப்பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா சான்றிதழ்களை வழங்கினார். அவர் கூறும்போது, ‘‘முதுமலையில் 175 வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில அரசின் தமிழ்யேர்மன் என்ற வண்ணத்துப்பூச்சியும், எல்லோ ஜாக் சைலர் என்ற வண்ணத்துப்பூச்சியும் பதிவாகியுள்ளன.
வண்ணத்துப்பூச்சி இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை முதுமலை பகுதியில் காணப்படுகின்றன. இது இப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் வாழ்வதற்கான காலநிலை நிலவுவதை உறுதி செய்துள்ளது. உயிர்ச்சூழல் மண்டலத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடு முக்கிய இடத்தில் உள்ளது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெறும்’’ என்றார்.