"முதலை வாய்க்குள்ள போன மாதிரிதான்..." என்று ஒரு சொலவடை உண்டு. திரும்பக் கிடைக்காத எந்த ஒரு விஷயத்தை பற்றிக் குறிப்பிட இப்படிச் சொல்வதுண்டு. இங்கே, தொழில்நுட்பத்தின் சமீபத்திய குழந்தையான ட்ரோன் கேமரா, முதலை ஒன்று நீரில் மிதப்பதை படம் பிடிப்பதையும், அதை இரை என நினைத்து அந்தரத்தில் பறந்து துள்ளிப்பிடித்த முதலையின் சாகசமும் இணைவாசிகளை வெகுவாக கவர்ந்து வைரலாகி உள்ளது.
12 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோ ஹவ் திங்ஸ் ஒர்க் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், உடலை தண்ணீரில் மறைத்தபடி, மூக்கையும் முட்டை கண்களை மட்டும் வெளியே நீட்டிய படி வேட்டை வெறியுடன் வரும் முதலை ஒன்று வருகிறது. அதை நீர் பறப்பிற்கு மேலே எட்டித்தொடும் தூரத்தில் காற்றில் மிதந்தபடி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு ட்ரோன் கேமரா. ட்ரோனை இரை என நினைத்து அதன் மீது முதலை கவனம் குவித்திருக்க, அதற்கு போக்குக் காட்டி அசைந்தாடி கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்புகிறது ட்ரோன் கேமரா.
ட்ரோனின் போக்கிற்கே நீரில் செங்குத்தாக மிதந்தபடி வேட்டையின் மீது கவனமாக இருக்கும் முதலை எதிராபாராத தருணம் ஒன்றில் "நான் வைச்ச குறி தப்பாது..." என அந்தரத்தில் எம்பிக் குதித்து காற்றில் மீதந்தபடி ட்ரோனை கவ்விப்பிடித்து கமளீகரம் செய்திறது. அப்புறம் என்ன... முதலை நீச்சலடிப்பதை படம்பிடிக்க வந்த ட்ரோன் கேமரா முதலையின் வயிற்றைப் படம் பிடிக்க வேண்டியது தான்...
‘காட்டுயிர்களை படம் பிடிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தும்போது’ என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 6 ஆயிரம் இதனை மறுபகிர்வு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதற்கு வீடியோவிற்கான பின்னுட்டங்கள் உணர்த்தும். மேலும், இந்த வீடியோ காட்டுயிர்களை படம் பிடிக்க ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்த விவாதத்தையும் பயனர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பயனர், "மிகவும் வேடிக்கையான வீடியோ” என்று தெரிவித்துள்ளார். சிலர் “ட்ரோன் கேமராவின் இரும்பு இறக்கைகளால் அந்த உயிர்கொல்லி காயமடைந்திருக்கும்” என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள ஒரு பயனர், “இல்லை அந்த உயிர்கொல்லி காயமடைந்திருக்காது. அந்த ட்ரோனை அது சாப்பிடாமல் இருந்தால். ஆனாலும் அந்த சின்ன இரும்பு இறக்கைகளால் அந்த உயிர்கொல்லியை காயப்படுத்தி விடமுடியாது. அது அவ்வளவு முரடானது” என்று தெரிவித்துள்ளார். மூன்றாவர், “இது இயற்கையின் நியதி” என்று கூறியுள்ளார்