டிசம்பர் மாதம் என்றாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். மழை குறைந்து முன்பனி மெதுவாக கூதல் தரத்த தொடங்கி இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்துத்தடுத்து பண்டிகைகளுக்கான வாசலைத் திறந்து வைக்கும் மாதமும் இதுவே. இவற்றுடன் தமிழகம் இன்னுமொரு உற்சாகத்திற்கும் தயாராகும். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இனப்பெருக்கத்திற்காக வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் மாதமும் இந்த டிசம்பர்தான். அதற்கு கட்டியம் கூறுகிறது தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ.
சுமார் 1.17 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், நாளெல்லாம் ஓடிக்களைத்த சூரியன் பணி முடிக்கத் தொடங்கும் பொன்மாலை பொழுதில், மஞ்சள் குளித்து கிடக்கும் கோடியக்கரை நீர்பரப்பில் இருந்து பூநாரை (ஃபிளமிங்கோ) ஒன்று மெல்ல தத்தித் தத்தி ஓடி நெஞ்சு கூடு தூக்கி வானத்தில் மிதக்கத் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பூநாரைக் கூட்டம் ஒன்று தங்களின் செஞ்சிறகுகள் மிளிர எதிரிகள் மீது ஏவப்பட்ட அம்புகளாய் வானில் மிதந்தபடி செல்கின்றன
நான்கு நாட்களுக்கு முன்பு (டிச.17) இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுப்ரியா சாகு, "தமிழ்நாட்டின் மாயாஜால கோடியக்கரை பாயின்ட் கலிமேரா பறவைகள் சரணாலயம், கடல் கடந்து புலம்பெயர்ந்து வரும் வலசை பறவைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஏற்கெனவே முத்துப்பேட்டை மாங்ரோவ் காடுகளுக்கு 50 ஆயிரம் பூநாரைகள் வந்திருக்கின்றன. மெய்சிலிர்க்க வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
பரவலாக கவனம் ஈர்த்துள்ள இந்த வீடியோவை இதுவரை 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 1200 பேர் விரும்பியுள்ளனர். பலர் தங்களின் பரவசத்தை பகிர்ந்துள்ளனர். பயனர் ஒருவர் "என்ன ஒரு அழகு, என்ன ஒரு கருணை. சில நேரங்களில் ஒரு அதிசயம் நம்மை பரவசப்படுத்தி இந்த பிரபஞ்சத்தில் நாம் அவர்களுடன் இருக்கிறோம் என்று உணர்த்திவிடுகிறது" என்று தெரிவித்துள்ளர். மற்றொரு பயனர், "நிச்சயமாக இது சொர்க்கம்" என்று தெரிவித்துள்ளார். மூன்றாமவர் "தண்ணீரில் சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு கரைத்து ஊற்றிய தங்கம் போல் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.