காட்டுயிர்களின் காணொளிகளை காண்பது எப்போதுமே பலரின் மனதிற்கு பிடித்தமான ஒன்று. அதுவும் அரியவகை மிருகங்கள் உள்ளத்தில் எழும் உற்சாகத்திற்கு அளவு இல்லை. அப்படி ஓர் அரிய வகை காட்டு வாழ்க்கை காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
காணொளியின் தொடக்கத்தில், காட்டில் காட்டு ஓடை போல் இருக்கும் பாறைகள் நிறைந்த பாதை ஒன்றில் ஒரு பெண் சிங்கம் கம்பீரமாக நடந்து வருகிறது. அந்த பெண் சிங்கத்தினை அதன் குட்டிகள் பின்தொடர்கின்றன. குட்டிகள் பாறை பாதையிலும், அருகில் இருக்கும் புல்வெளி பாதைகளிலும் உற்சாகமாக துள்ளிக் குதித்தபடி வருகின்றன. குட்டிகளின் உற்சாகம் நம்மைத் தொற்றிக்கொள்ளும் நேரத்தில் கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடன் தன் உடன்பிறப்புகளுடன் ஓடும் ஒரு குட்டி அதிக கவனம் ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதற்குக் காரணம், அதன் உற்சாகத்தையும் தாண்டி அதன் நிறம். அது ஒரு வெள்ளை சிங்கக் குட்டி.
கொஞ்சம் கண்ணூன்றி அந்தக் குட்டியை பார்க்கும்போது தாய் சிங்கம் கொஞ்சம் நின்று திரும்பி பார்த்து காத்திருக்கிறது. பின்னால், இன்னும் இரண்டு சிங்கக் குட்டிகள் ஓடி வந்து குட்டிகளின் கூட்டத்துடன் இணைய, அந்தப் பயணம் மீண்டும் தொடர்கிறது. இத்தனைச் சம்பவங்களும் 18 விநாடிகளுக்குள் முடிந்து விடுகிறது.
அடிக்கடி இதுபோன்ற காட்டுயிர் காணொளிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் இந்திய வனப்பணி அதிகாரி சுசந்தா நந்தா என்பரே இந்த காணொளியையும் பகிர்ந்துள்ளார். அதில், “இதோ உங்களுக்காக ஒரு வெள்ளை நிற சிங்கக் குட்டி. உலகில், மூன்று வெள்ளை நிற சிங்கங்களே காட்டில் சுதந்திரமாக வாழ்வதாக நம்பப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
சுசன்தா நந்தா இந்தக் காணொளியை வியாழக்கிழமை பகிர்ந்துள்ளார். ஒரு நாளைக்குள் இதனை இதுவரை 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 1,700 பேர் விரும்பி உள்ளனர். பலர் கருத்தும் தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர், "இது மிகவும் அழகானது, அற்புதமானது. உங்களை போல உள்ள ஆட்கள் வனப்பணியில் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த குட்டிகளை பார்த்துக் கொள்வதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “இவற்றைப் பார்ப்பது அற்புதமாக உள்ளது. அவை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அது இந்தியாவில் இருக்கும் என்றால் அதன் இடத்தை மாற்றி விடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது நபர், “எல்லா சிங்கக் குட்டிகளும் பார்க்க மிகவும் அழகாக இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.