கடலூர்: சிதம்பரம் பகுதி நீர்நிலைகளில் சுற்றித்திரியும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் பழைய கொள்ளிடம், வடக்குராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கொள்ளிடம் ஆறு, பாலமான் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. மழை, வெள்ள காலங்களில் மேட்டூர் தண்ணீரில் வரும் முதலைகள் இந்த நீர்நிலைகளில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல்கி பெருகி விடுகின்றன.
நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் பொதுமக்கள், நீர்நிலைகளின் கரையோரம் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் உள்ளிட்டவைகளை கடித்து தண்ணீருக்குள் இழுத்துச்சென்று கொன்று விடுகின்றன. மேலும், கோடைக் காலங்களில் நீர்நிலைகளில் இருந்து உணவு தேடி முதலைகள் ஊருக்குள் சென்று கோழி, ஆடு, கன்றுக்குட்டி ஆகியவற்றை கடித்து இழுத்து செல்வதும் உண்டு. தண்ணீரில் இருக்கும் முதலைகள் கரையில் ஏறி படுத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டுவதும் உண்டு.
சிதம்பரம் அருகே உள்ள அகரநல்லூர், வேளக்குடி, பழையநல்லூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, இளநாங்கூர், கண்டியமேடு, நந்திமங்கலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சிதம்பரம் நகரத்தை ஓட்டியுள்ள 10-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் முதலைகள் நடமாட்டம் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும், இப்பகுதியில் பிடிக்கப்படும் முதலைகள் வக்காரமாரி குளத்தில் விடுவதால் அது மீண்டும் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு வந்து விடுகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. சிதம்பரம் வனச்சரக அலுவலகம் சார்பில் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை சுற்றியுள்ள கிராமங்களில் முதலை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி எச்சரிக்கையுடன் இருக்கு மாறு பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் முதலை பண்ணை அமைத்து நீர்நிலைகளில் உள்ள முதலைகளை பிடித்து அதில் விட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மனித உயிரிப்பு ஏற்பட்டுள்ளன.