உதகை: முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த யானை பாகன்கள், பயிற்சிக்காக தாய்லாந்து நாட்டுக்கு செல்கின்றனர் என்று, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன. அதேபோல, இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு யானைகள் வளர்க்கப் படுகின்றன. பல கும்கி யானைகள் உள்ளன.
யானைகளை பராமரித்து, வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குரும்பர் பழங்குடியின மக்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு என்று ஒரு யானையை தேர்வு செய்து,அதனை பிறந்தது முதல் கடைசிவரை பராமரித்து வருகின்றனர்.இவர்களின் சொல்லுக்கு யானைகள் கட்டுப்படுகின்றன. இவர்கள் அளிக்கும் உணவுகளையே உட்கொள்கின்றன.
மேலும், யானை பாகன்கள் மற்றும் காவடிகள் என்ன சொல்கிறார்களோ, அதற்கே அந்த காட்டு யானைகள் கட்டுப்படுகின்றன. முதுமலையில் உள்ள பல யானைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவந்தபோதிலும், இங்கு அவைகளுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு யானை வளர்ப்பில் பல புதிய யுக்திகளை கையாளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, தாய்லாந்து நாட்டுக்கு அவர்கள் அனுப்பப்படவுள்ளனர். அங்கு இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 7 பாகன்களும், ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த பாகன்களும் தாய்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு செல்லவுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, "யானைகளை பராமரிக்கும் பணிகளில் பழங்குடியின மக்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களே பாகன்களாகவும், காவடிகளாகவும் பணிபுரிகின்றனர். இந்நிலையில், முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளிலுள்ள யானை பாகன்கள் தேர்வு செய்யப்பட்டு, தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கு அவர்களுக்கு யானைகளை வளர்ப்பது, பராமரிப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான செலவுகளை வனத்துறை ஏற்கும்" என்றார்.