சுற்றுச்சூழல்

பனிப்பொழிவு தொடங்கியதால் பசுமை இழக்கும் முதுமலை: உணவு, தண்ணீர் தேடி இடம்பெயரும் வன விலங்குகள்

ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை: பனி காலம் தொடங்கியுள்ளதால் முதுமலையில் பசுமை குறைந்து, உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் இரண்டாவது வாரம் வரை பெய்யும். பின்னர் பனி காலம் தொடங்கும். பனிக்காலம் ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த நேரங்களில்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உறை பனி பொழியும். இதனால் தேயிலை, காய்கறி செடிகள் மற்றும் புல்வெளிகள் கருகிவிடும்.

இந்நிலையில், நடப்பாண்டு புயல் சின்னம் காரணமாக பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்து வருகின்றன. பசுமை குறைந்து வருவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. தற்போது, சாலையோரங்களில் யானைகள் உட்படவிலங்குகளை காண்பது அரிதாகி விட்டது.

தீத்தடுப்புக் கோடு: முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்தீ பரவுவதை தடுக்க, தீத்தடுப்பு நடவடிக்கைகளில் காப்பகநிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு பருவ மழையால். காப்பகத்தில் தாவரங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதனால், பனியால் அவை கருகி தீப்பிடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, "முதுமலையில் தற்போது அந்நிய தாவரங்களான உண்ணி, பார்த்தீனியம் செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. பனிக்காலம் தொடங்கியுள்ளதால், வனத்தீ பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வனத்தீ பெரும்பாலும் செயற்கையாகவே ஏற்படுகிறது. இதனால் காப்பகத்துக்குள் செல்லும் சாலைகளை வனத்துறையினர் கண்காணிப்பார்கள். குறிப்பாக, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு, விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். 6 மீட்டர் அகலத்துக்கு சுமார் ஆயிரம் கி.மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள் வெட்டப்படும்.

வனத்தீ ஏற்பட்டால் கட்டுப்படுத்த தீயணைப்பு தடுப்பு படையினர் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். மேலும், வனத்தீ குறித்து வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்கள் நடத்தப்படும். புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நிறுவப்பட்ட கேமராக்கள் வனத்தீயை தடுக்க பயன்படுத்தப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT