புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவி ஒருவர், குப்பைகளை கொண்டு வீட்டிலேயே, குறுகிய காலத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கணுவாப்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி வனஜா. இவர், குப்பைகளை கொண்டு வீட்டிலேயே குறுகிய காலத்தில் இயற்கை உரம் தாயாரிக்கக் கூடிய இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இவரின் படைப்பு, பள்ளி அளவில் நடந்த 'ஐடியா' கண்காட்சியில் தேர்வானது. பின்னர், ஆன்லைன் மூலம் நடந்த மாநில அளவிலான போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 படைப்புகள் தேசிய அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் மாணவி வனஜாவின் படைப்பும் தேர்வானது.
தொடர்ந்து, டெல்லியில், கடந்த செப்.13-ம் தேதி முதல் செப்.16-ம் தேதி வரை நடைபெற்ற, தேசிய அளவிலான 9-வது இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சியில் மாணவிவனஜாவின் படைப்பும் இடம் பெற்றது. இக்கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 620 படைப்புகள் இடம்பெற்றன. இதில் மாணவி வனஜாவின் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் பார்வையாளர்களையும், நடுவர்க ளையும் வெகுவாக கவர்ந்தது.
இதுகுறித்து மாணவி வனஜா கூறுகையில், " நாம் தெருவில் வீசும் குப்பைகளால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை விளக்கி கூறி, 'வீட்டுக்கு வீடு உரத்தொட்டி' என்ற தலைப்பில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அறிவியல் ஆசிரியை அனுசுயா வழிகாட்டினார்.
அவரது உதவியுடன், குறுகிய காலத்தில் மிக எளிமையாக, உரம் தயாரிக்க தேவையான அனைத்து வசதிகளும் கூடிய ஒரு இயந்திரத்தை வடிவமைக்க திட்டமிட்டேன்.
அதன்படி, கரிமக் கழிவுகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்ட மோட்டாருடன் கூடிய கூர்மையான கத்திகள், பெரிய துண்டுகள் உரத்தொட்டியில் விழாமல் தடுக்க ஒரு வலை, கழிவுகளை தினமும் கிளரி விட முள் கம்பிகள், சரியான ஈரப்பதத்தை தக்க வைக்க தண்ணீர் குழாய்கள், போதுமான காற்றோட்டத்துக்காக தொட்டி முழுவதும் சிறு துளைகள் போன்ற அம்சங்களுடன் இந்த இயந்திரத்தை வடிவமைத்தேன்.
இயந்திரத்துக்கு மின் இணைப்பு கொடுத்து, சுவிட்ச்சு ஆன் செய்தால், சில நிமிடங்களிலேயே கரிமக் கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக்கி உரத்தொட்டிக்கு அனுப்பி விடும். பின்னர், 10 முதல் 15 நாட்களில் கருப்பு நிறுத்தில் மண் வாசனையுடன் கூடிய ஊட்டசத்துக்கள் மிகுந்த தரமான இயற்கை உரம் தயாராகி விடும்.
இதனை வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இயந்திரத்தை கண்ட றிய உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக் கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த இயந்திரத்தை கருதுகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இது எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
தொடர்ந்து அனைவருக்கும் பயன்படும் வகையிலான எளிய இயந்திரங்களை கண்டறிய வேன் என்று தெரிவித்தார்.