COP 27 உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (நவ.6) தொடங்கி நவம்பர் 18-ம் தேதி வரை எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற உள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்படும் என்பதால், மிக முக்கியமான மாநாடாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
ஐ.நா காலநிலை மாநாடு: காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் ஐ.நா சார்பில் காலநிலை மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடுதான் COP என்று அழைக்கப்படுகிறது. COP என்பது கான்ஃப்ரன்ஸ் ஆஃப் த பார்ட்டீஸ் (Conference of the Parties) என்பதன் சுருக்கம்.
COP27: இதுவரை மொத்தம் 26 COP மாநாடுகள் நடைபெற்றுள்ளது. COP முதல் மாநாடு 1995-ம் ஆண்டு நடைபெற்றது. கடந்த மாநாடு கிளாஸ்கோவில் நடைபெற்றது. தற்போது நடைபெற உள்ள 27-வது மாநாடு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற உள்ளது.
முக்கிய அம்சங்கள்: இந்த மாநாட்டில் 5 முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளது. இதன்படி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, காலநிலை மாற்ற திட்டங்களுக்கான நிதி ஆதாரம், காலநிலை மாற்றத்தை குறைப்பதில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்துதல் ஆகிய 5 முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.
என்ன விவாதம்? - வெப்ப அலை, கடல் மட்டம் உயர்வு, இயற்கைப் பேரிடர்கள், காற்று மாசு, பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல், புவி வெப்பநிலை உயர்வு என்று காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் விவாதம் நடத்த உள்ளனர்.
பிரகடனம்: ஒவ்வொரு மாநாட்டின் இறுதியிலும் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து நாடுகளும் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பிரகடனத்தில் கூறியுவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்துவதை ஒப்புக்கொண்டு இதில் நாடுகள் கையெழுத்திடும்.
மோடியின் பஞ்சாமிர்தம்: COP 26-வது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஐந்து அம்சம் கொண்ட பஞ்சாமிர்தத்தை முன்வைத்தார். இதன்படி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 2030-க்குள் 500 ஜிகாவாட்டாக எட்டுதல், 2030-ம் ஆண்டில் எரிசக்தி தேவைகளில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுவது, 2030-ம் ஆண்டுக்குள் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தை ஒரு பில்லியன் டன்கள் குறைப்பது. 2030-க்குள், பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதத்திற்கும் குறைவாக குறைப்பது. 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவது உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்தார்.
COP27 மாநாட்டில் இந்தியா: COP 27-வது மாநாட்டில் பங்கேற்கும் இந்தியக் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை வகிக்கிறார். இதில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கமான ‘லைஃப்’ இயக்கத்தில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது.