தண்ணீர் தொட்டி மீது ஏறி ஒய்யாரமாக தேன் குடிக்கும் கரடி 
சுற்றுச்சூழல்

தேன் குடிக்க வந்தல்லோ... - தண்ணீர் தொட்டியில் ஏறி தேன் குடிக்கும் கரடி | வைரல் 

செய்திப்பிரிவு

விரட்டிக் கொட்டும் தேனீகளுக்கு மத்தியில் உயரமான தண்ணீர் தொட்டி மீது ஏறி ஒய்யாரமாக தேன் குடிக்கும் கரடி ஒன்றின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கரடியின் செயல் அபிமான கார்ட்டூன் கதாபாத்திரமான "வின்னி தி பூஹ்" நினைவூட்டலாக இருக்கிறது.

இந்திய வனப்பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சுமார் 1.12 நிமிடங்கள் ஓடும் அதில், உயரமான மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியின் வளைந்த படிகளில் துளியும் பயமில்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. இப்போது கேமரா கொஞ்சம் மேலே திரும்ப, அங்கே இன்னொரு கரடி தண்ணீர் தொட்டியின் அடிப்பகுதியில் தேனீகள் கட்டியிருக்கும் கூட்டை நெருங்கி இருந்தது. கரடி அதை எட்டி பிடித்தவுடன் நூற்றுக்கணக்கான தேனீக்கள் கரடியை சீற்றத்துடன் கொட்ட அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் கரடி கூட்டை பிய்த்து தேனை ருசிக்கிறது.

இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ள சுசந்தா நந்தா, "தேன்கூட்டிலிருந்து தேன் எடுப்பதற்காக வளைந்த படிக்கட்டுகளில் ஏறும் இந்த தேன் கரடியின் செயல், விலங்குகள் தங்களின் விருப்பமான உணவுக்காக எதையும் செய்யும் உறுதியை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பல ஆயிரம் பார்வையார்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

தேனீக்களிடமிருந்து கரடி தப்பித்து வந்ததது அதிசயமே என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், இந்தக் கரடி தனக்கு கார்ட்டூன் கதாபாத்திரமான பூஹ் கரடியை நினைவுட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர் பாவம் அந்தக் கரடி தேனீக்களிடம் நன்றாக கொட்டு வாங்கியிருக்கும் என்று கரடிக்காக வருத்தப்பட்டுள்ளார். இந்தக் கருத்துக்களுக்கு நடுவில் ஒரு பயனர், காடுகளில் பழங்களின் விதைகளை எறிந்து காடுகளை உருவாக்குங்கள். அது இதுபோன்ற விலங்குகளிக்கு அவைகளுக்கு விருப்பமான உணவுகளை உண்ண வழிசெய்யும். பழங்கள் தேனீக்களையும் கவரும். உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்தப் பகுதியில் பழமரங்களை நடுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

SCROLL FOR NEXT