யானைகள் எப்போதுமே கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய மிருகம். ஆனால் சில நேரங்களில் யானைக் கூட்டத்திலிருந்து தவறுதலாக குட்டிகள் திசை மாறிவிடும். அப்படியான நேரங்களில் குட்டிகளை வனத் துறை அதன் கூட்டத்தோடு சேர்த்து வைக்கும்.
அவ்வாறாக ஒரு வழிதவறிய யானைக் குட்டியை அதன் கூட்டத்தில் சேர்த்து வைத்துள்ளது வனத்துறை. அப்போது அந்த தாய் யானை வனத்துறை ஊழியர்களைப் பார்த்து நன்றி சொல்வதுபோல் தனது தும்பிக்கையை உயர்த்திக் காட்டுகிறது. சுசாந்த நந்தா என்ற இந்திய வனத் துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் கீழ் வீடியோவுக்காக தமிழக வனத்துறைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைப் பகிந்த அவர், “அந்த ஆசீர்வாதம்... குட்டியை தாய் யானையுடன் வனத் துறை அதிகாரிகள் இணைத்து வைத்தனர். அந்த தாய் யானை அதன் சொர்க்கபுரிக்குச் செல்லும் முன் அழகாக வாழ்த்திச் செல்கிறது. எத்தனை அழகு. தவறுவிடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார். தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
சுசாந்த நந்தா இதுபோன்று பல்வேறு வீடியோக்களை பகிர்ந்திருப்பார். அதுவும் குறிப்பாக அண்மையில் அவர் நீலகிரியில் யானை ஒன்று பிளாஸ்டிக் பையை எடுத்து உண்ணும் வீடியோ மிகுந்த கவனம் பெற்றது. வன உயிர்களைப் பாதுகாக்க மக்கள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்று கோரியிருப்பார்.