பிளாஸ்டிக் மாசு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் அது பேரண்டத்திற்கு பேர் அழிவாகும் அமைந்துள்ளது. மனிதர்களின் கண்டுபிடிப்பில் நெகிழி ஆபத்தானதாக அறியப்படுகிறது. இத்தகைய சூழலில் பசியுடன் திரிந்த யானை ஒன்று பிளாஸ்டிக்கை சாப்பிட முயன்றுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி நெட்டிசன்களை வருத்தமடைய செய்துள்ளது.
நம் ஊர் பக்கங்களில் ‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது’ என்ற ஒரு சொலவடை உண்டு. ஆனால் இங்கு யானைக்கு பசி எடுத்தால் பிளாஸ்டிக்கையும் தின்னும் என்ற வகையில் அமைந்துள்ளது அந்த வீடியோ.
நிலப்பகுதியில் வாழும் மிகப்பெரிய உயிர்களில் ஒன்றாக உள்ளது யானை. பொதுவாகவே யானைகள் கூட்டுக் குடும்பமாக இணைந்து வாழ்பவை. மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் பிணைப்புகளை போலவே யானைகளும் தான் சார்ந்துள்ள குடும்பத்துடன் பிணைப்பு கொண்டிருக்குமாம். யானைகளை கானகத்தின் காப்பான் என்றும் சொல்லலாம். கிலோமீட்டர் கணக்கில் நடப்பது, கிலோ கணக்கில் சாப்பிடுவது என அதன் வாழ்வு முறை அமைந்துள்ளது.
இந்நிலையில், அதன் வலசை பாதைகள் அழிப்பு, மனித மிருக மோதல்கள் என யானைகள் பூவுலகில் வாழ பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் யானை ஒன்று பிளாஸ்டிக்கை சாப்பிட முயன்றது நெஞ்சை பதபதைக்க செய்துள்ளது. அந்த வீடியோ காட்சியை இந்திய வனப் பணி அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ நீலகிரி பகுதியில் எடுக்கப்பட்டதாக தனக்கு தகவல் வந்ததாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
“மனிதர்களாகிய நாம் தான் இயற்கையால் ஜீரணிக்க முடியாத கழிவுகளை உருவாக்குகிறோம். பேர் உயிருக்கும் பிளாஸ்டிக் ஆபத்து தான். அது அதன் உணவு குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். அதனால் ஒருமுறை மட்டுமே பயன் கொண்ட பிளாஸ்டிக்கை பாதுகாப்பான வழியில் டிஸ்போஸ் செய்வது அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பலரும் வாட்டத்துடன் அந்த ட்வீட்டில் கமெண்ட் செய்து வருகின்றனர்.