கால நிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது என, வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கோவையில் ‘தண்ணீர் 2022’ கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் மேலாண்மைதுறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் பேசும்போது, “நாட்டில் பல மாநிலங்களில் நீராதாரங்களின் நிலை மிக மோசமாக உள்ளது. கால நிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமாகும்.
இமயமலையில் பனிச் சிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் வெள்ளம், வறட்சி போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது. கடல்நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கேரளா, ஒடிசா, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் ரசாயனங்கள் மற்றும் கிருமிகளால் மாசடைந்து வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை நீர் ஆதாரங்களின் நிலையை பருவமழை தான் நிர்ணயம் செய்கிறது. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பெங்களூரு நகரில் சமீபத்தில் காணப்பட்ட வெள்ள பாதிப்பு இதற்கு சிறந்த சான்றாகும்” என்றனர்.
கருத்தரங்கு முடிவில், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீர் ஆதாரங்களின் நிலையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.