சுற்றுச்சூழல்

பூமியின் வெப்பமான, வறட்சியான டெத் பள்ளத்தாக்கில் உருவான அருவிகள்: காரணம் என்ன?

செய்திப்பிரிவு

கலிபோர்னியா: பூமியின் மிகவும் வெப்பம் மிகுந்ததும், வறட்சியானதுமான இடமாக அறியப்படுகிறது கலிபோர்னியா - நெவாடா எல்லையோர பகுதியில் உள்ள டெத் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கில் இப்போது சிறு சிறு அருவிகள் உருவாகி உள்ளதாக தெரிகிறது. அதன் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் இப்போது வெளியாகியுள்ளன.

இதற்கு காரணம் கே சூறாவளியின் தாக்கம் என டெத் வேலி தேசிய பூங்கா தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கில் பூமியிலேயே அதிகபட்சமாக சுமார் 56.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் ஆண்டுக்கு வெறும் 2.2 இன்ச் மழை மட்டுமே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மற்றும் நடப்பு செப்டம்பரில் இதுவரையில் அதிகளவிலான மழை இந்தப் பகுதியில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கே சூறாவளியின் தாக்கத்தால் உருவான புயல்கள் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும். அதன் காரணமாக பேட் வாட்டர் பேசின் பகுதியில் சேரும் சகதியுமான நீர் மலையில் இருந்து சிறு சிறு அருவிகள் போல வீழ்கின்றன. இந்த திடீர் வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும் ,காலநிலை மாற்றத்தின் தாக்கம் மோசமடைந்து வருகின்ற காரணத்தால் புயல்கள், வெப்ப அலைகள், காட்டுத்தீ, வறட்சி மற்றும் அதீத மழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT