தருமபுரி மாவட்ட வனப்பகுதியை யொட்டிய சாலைகளில் வாகனங்களில் சிக்கி உயிரினங்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் என 7 தாலுகாவிலும் கணிசமான பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனங்களுக்கு நடுவிலும், வனப்பகுதியையொட்டியும் பல இடங்களில் சாலைகள் அமைந்துள்ளன. சில பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையும், சில பகுதிகளில் கிராம சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் வனப்பகுதிகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென ஏற்கெனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும், இந்த விதிகள் பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படுவதில்லை. இதனால், வனப்பகுதியையொட்டிய சாலைகளில் பாம்பு, குரங்கு, மான், மயில் உள்ளிட்ட உயிரினங்களும்,பச்சோந்தி போன்ற அரிய வகை உயிரினங்களும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.
இதை தடுக்கும் வகையில், வனப் பகுதி சாலைகளில் வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த கலாச்சார மற்றும் சுற்றுலா ஆர்வலர் பிரணவகுமார் கூறியது:
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் வனத்தை ஒட்டிய மற்றும் வனத்தில் நடுவே அமைந்துள்ள சாலைகள் தொடங்கி தொப்பூர் கணவாய் பகுதி, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சிட்லிங் வனப்பகுதி, மஞ்சவாடி கணவாய் பகுதி, பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வனத்தை ஒட்டிய சாலைகளில் பலமுறை வன உயிரினங்களின் உயிரிழப்பை காண முடிந்துள்ளது.
அரசால் பரிந்துரைக்கப்பட்ட வேகத்தை கடந்து இப்பகுதிகளில் வாகனங்கள் இயக்கப்படுவதால் தான் சாலையில் வன உயிரினங்கள் குறுக்கிடும்போது அவை வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. எனவே, வேகக் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் கட்டாயம் அதற்கான விதிகளை வாகன ஓட்டிகள் பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.