பூமிப் பந்தின் ஒவ்வொரு பகுதியிலும் காலநிலையின் தாக்கம் வெவ்வேறு வகையில் உள்ளது. சில இடங்களில் அதீத மழைப் பொழிவு, சில இடங்களில் ஒரு துளி மழை கூட இல்லாதததை இதற்கு காரணமாக சொல்லலாம். அந்த வகையில் கடுமையான வறட்சி காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் ஆயிரக்கணக்கான வன விலங்குகளை உள்நாட்டுக்குள் இடம்பெயரச் செய்து வரும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2012-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தில் வனவிலங்குகள் கப்பலில் நாடு கடத்துவார்கள். இது அது போல இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அதே நிலை தன். அந்தக் காட்சியை ஒரு முறை உங்கள் மனக்கண்ணில் ரீவைண்ட் செய்து பாருங்கள். என்ன, அந்தப் படத்தில் தன்னலம் கருதி விலங்குகள் கொண்டு செல்லப்படும். ஜிம்பாப்வேயில் விலங்குகளின் நலன் கருதி இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வனவிலங்குகள்: 400 யானைகள், 2000 மான்கள், 70 ஒட்டகச்சிவிங்கிகள், 50 எருமைகள், 50 காட்டெருமைகள், 50 வரிக்குதிரைகள், 50 எலண்ட்ஸ் (தென்னாப்பிரிக்க மான் இனம்), 10 சிங்கங்கள் மற்றும் 10 காட்டுநாய்கள் என மாபெரும் இடப்பெயர்வு அங்கு நடக்கிறது. உலோக கூண்டுகளில் இந்த விலங்குகள் அடைக்கப்பட்டு, தரை வழியாகவும், வான் வழியாகவும் கொண்டு செல்லப்படுகிறது. ஹெலிகாப்டர், டிரக், கிரேன் போன்ற ஊர்திகள் இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
சில விலங்குகளுக்கு மயக்க மருந்து செலுத்தி இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இது தெற்கு ஆப்பிரிக்காவில் உயிர் உள்ள விலங்குகளை இடம்பெயரச் செய்யும் முயற்சியில் மிகப்பெரியது என சொல்லப்படுகிறது. ‘Project Rewild Zambezi’ என இது அறியப்படுகிறது.
தெற்கிலிருந்து வடக்கு நோக்கி! - இந்த இடப்பெயர்வு அந்த நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதி நோக்கி நடந்து வருகிறதாம். ஜிம்பாப்வே நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சேவ் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வடக்கில் உள்ள சபி, மட்டுசடோன்ஹா மற்றும் சிஸாரிரா ஆகிய பகுதிகளுக்கு இந்த விலங்குகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் கடுமையான வறட்சி என சொல்லப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வனவிலங்குகளை வேட்டையாடும் அச்சுறுத்தலும் இருந்து வருகிறது.
60 ஆண்டுகளில் மிகப்பெரியது! - கடந்த 60 ஆண்டுகளில் இது மிகப் பெரியது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 1958-62 கால கட்டத்தில் அந்த நாட்டில் மைனாரிட்டி ஆட்சி இருந்த போது நீர் மட்டம் உயர்ந்த காரணத்தால் அப்போது 5000 விலங்குகள் உயிருடன் இடம் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை அந்த நாட்டில் கடுமையான வறட்சியின் காரணமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“பல ஆண்டுகளாக வேட்டையாடுதலை தடுத்து வந்தோம். கிட்டத்தட்ட அதில் வெற்றி கிட்டும் நிலையில் காலநிலை மாற்றத்தால் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் வறட்சி காரணமாக உணவு மாற்று நீர் ஆதாரம் வேண்டி மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அவை நகர்ந்து வருகின்றன. இது இரண்டு தரப்புக்கும் ஆபத்து.
இதற்கு தீர்வு என்றால் விலங்குகளைக் கொல்வது மட்டுமே ஒரே ஆப்ஷனாக உள்ளது. ஆனால் அதற்கு விலங்குகள் நல ஆர்வலர்களின் எதிர்ப்பு உள்ளது. மறுபக்கம் கடந்த 1987 வாக்கில் இது போல விலங்குகள் அழிப்புப் பணிகள் நடந்துள்ளன. இந்த முறை அது நடக்கவில்லை. விலங்குகள் வசந்தத்தை நோக்கிப் பயணிக்கின்றன” என்கிறார் அந்த நாட்டின் வனவிலங்கு மேலாண்மை ஆணைய செய்தித் தொடர்பாளர் டினாஷி ஃபராவோ.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஜிம்பாப்வே மட்டுமல்லாது ஆப்பிரிக்கா முழுவதும் இருந்து வருகிறதாம். அதன் காரணமாக சிங்கம், யானை, காட்டெருமை, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, மான் போன்ற விலங்குகளுக்கு தேவையான உணவின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இந்த பணிக்கு கிரேட் பிளெயின்ஸ் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பு உதவி வருகிறதாம். பெரும்பாலான விலங்குகள் சாம்பேசி நதி அருகே அமைந்துள்ள வன உயிர் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதாம். தனியாரால் நடத்தப்பட்டு வரும் இந்த காப்பகத்தின் பரப்பளவு 2.8 லட்சம் கொண்டதாம். ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாட்டின் எல்லையில் இது அமைந்துள்ளது.