தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் பச்சை மண் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. 
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பூசாத பச்சை மண் விநாயகர் சிலைகளுக்கு அதிக வரவேற்பு

செய்திப்பிரிவு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, வண்ணம் பூசப்படாத பச்சை மண் விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா அந்தந்த பகுதி மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. தாங்கள் நடத்தும் விழா சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிக உயரமான சிலை வைத்து வழிபடுதல், கண் கவரும் வண்ணங்களைக் கொண்ட சிலை வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற மனநிலையை உணர்ந்த சிலை உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு ஆண்டு புதுமை செய்வது, ரசாயனம் சார்ந்த மூலப் பொருட்களை பயன்படுத்துவது, சிலைகளின் வண்ணங்களில் நவீனத்தை கையாள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கினர்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, காலத்திற்கேற்ற மேம்பாடு, வர்த்தக அம்சங்களை பின்பற்றுதல்ஆகியவற்றால் விநாயகர் சிலை தயாரிப்பில் சூழல் பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் படிப்படியாக தவிர்க்கப்பட்டன.

இதன் மூலம் ஏற்படும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு, நீர்நிலைகள் மாசுபாடு உள்ளிட்டவற்றை உணரத் தொடங்கிய அரசும், சூழல் ஆர்வலர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினர்.

இதற்கிடையில், வெறும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மட்டுமே கைகொடுக்காது என்பதை உணர்ந்த அரசு, சிலைகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், சிலைகளுக்கு பயன்படுத்தும் வண்ணங்கள் உள்ளிட்டவை தொடர்பாக கட்டாய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.

மற்றொருபுறம், சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சிலைகளுக்கான ஆதரவு மனநிலையில் இருந்து பொதுமக்களை மாற்றும் முயற்சியில் அரசும், சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து இயங்கி வந்தனர்.

இவற்றின் பலனாக, விநாயகர்சிலை வாங்கும் வாடிக்கையாளர்களிடையே படிப்படியாக மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதற்கான அடையாளமாக நடப்புஆண்டில் பச்சை மண்(களிமண்ணால் மட்டுமே செய்து, வண்ணம் தீட்டாத சிலைகள்) விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து, தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையைச் சேர்ந்த சிலை உற்பத்தி தொழிலாளி அய்யனார் கூறியது:

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டில் பச்சை மண் விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பிரத்யேக அச்சில் களிமண் கலவையை வார்த்து தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளை உலர வைத்து, வண்ணம் மூலம் கண் மட்டுமே வரைந்து முடிக்கும் சிலைகளுக்கு இந்த ஆண்டில் தான் அதிக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

சிலை வாங்க வரும் வெளியூர் வியாபாரிகள், வண்ண விநாயகர்களுக்கு நிகராக பச்சை மண் விநாயகர்களையும் வாங்கிச் செல்கின்றனர். இந்த வரவேற்பு மேலும் அதிகரித்தால் சிலை உற்பத்தியாளர்களுக்கு பல சிரமங்களும், செலவுகளும் குறையும். சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT