சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில் நகர்புற வளர்ச்சி, கிராமப்புற வளர்ச்சி, விண்வெளி, ஏற்றுமதி, ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் பல திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவின் அமுதப் பெருவிழாவில் இந்தியாவிற்கும் மட்டுமல்ல உலகத்திற்கே பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது கால நிலை மாற்றம்.
காற்று மாசுவில் சிக்கி வரும் பெரிய நகரங்கள், அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக மாற்று எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதின் அவரச தேவை, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த திட்டங்களுக்கு புதிய வேகம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் கூறிய கொள்கைளின், அடிப்படையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவின் பங்களிப்பு செயல்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 75 வது ஆண்டில் மிக முக்கியமாக நகர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கொள்கையில் கார்பன் உமிழ்வை 2030-ம் ஆண்டுக்குள் 45 சதவீதம் குறைப்போம் என்றும், இந்தியாவுக்குத் தேவைப்படும் எரிசக்தித் தேவையில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும் என்றும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறைக்கு மாறும் வகையில் LIFE (Lifestyle for Environment) எனப்படும் மக்கள் பிரச்சார இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்புகள் இருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கால மாற்றத்தை எதிர்கொள்வது சாத்தியம் இல்லை.
காற்று மாசுவிற்கு முக்கிய காரணமாக இருக்கும் வாகனங்களில் இருந்தும் வெளியாகும் புகையை குறைக்க மின்சார வாகனங்களுக்கு மாறுவது, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்வது, சைக்கிள் பயன்படுத்துவது, தொலை தூர பயணத்திற்கு தனி நபர் வாகனங்களை பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது, இயற்கை வளங்களை பாதுகாப்பாது என்று காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாம் அளிக்கும் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது குறைவான நபர்களிடமே இதுபோன்ற வாகனங்கள் இருந்த காரணத்தால் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் நடந்து செல்வது, சைக்கிள் செல்வது, பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளைதான் பயன்படுத்தி வந்தனர் என்பதை நமது தாத்தா, பாட்டி கூற கேட்டு இருப்போம்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இதுபோன்ற ஒரு மாற்றம்தான் பொதுமக்களிடம் இருந்து வர வேண்டும் என்று உலகின் பல ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் இந்த மாற்றங்களை நோக்கி மக்களை நகர்த்த தொடங்கிவிட்டன.
நாம் சுதந்திரத்தைப் பெற நடத்திய பல ஆண்டு போராட்டத்தை போன்று காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் இன்னும் பல ஆண்டுகள் தொடரப் போகிறது. இதில் நம் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இதற்கு சுதந்திரத்திற்கு பின்பு இருந்தது போன்ற சூழலியலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு நாம் மாற்றிக் கொள்ளவதே மிகவும் சரியான நடவடிக்கையாக இருக்கும்.