புவனேஷ்வர்: இந்திய வனப் பணி அதிகாரி ஒருவர் பகிர்ந்த வீடியோவில் புதிதாக பிறந்த குட்டி யானைக்கு 'Z+++' பாதுகாப்பு கொடுத்து அழைத்து செல்கிறது அந்த யானைக் கூட்டம். இப்போது அது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி உள்ளது.
நிலப்பகுதியில் வாழும் மிகப்பெரிய உயிர்களில் ஒன்றாக உள்ளது யானை. பொதுவாகவே யானைகள் கூட்டுக் குடும்பமாக இணைந்து வாழ்பவை. மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் பிணைப்புகளை போலவே யானைகளும் தான் சார்ந்துள்ள குடும்பத்துடன் பிணைப்பு கொண்டிருக்குமாம்.
யானைகள் அக ஒலிகளின் மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டத்தில் உள்ள யானைகளுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் துளியளவும் தயக்கம் கொள்ளாமல் முன்னின்று பாதுகாக்கும் குணத்தை கொண்டது யானைகள். இந்த கூட்டத்திற்கு பெண் யானைகள் தான் தலைமை தாங்கும் என சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில் யானை கூட்டம் ஒன்று தங்கள் கூட்டத்தில் புதிதாக பிறந்த குட்டி யானை ஒன்றுக்கு புடை சூழ பாதுகாப்பு அளித்து அழைத்து செல்கின்றன. தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதை பார்க்கவே பலத்த ராணுவ பாதுகாப்பில் அழைத்து செல்லப்படும் தலைவரை போல உள்ளது. இதனை இந்திய வனப் பணி அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் அவர்.