காலநிலை மாற்றம் என்ற வார்த்தை சமீப காலமாக தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. உலக அளவில் பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூழலியல் சார்ந்து இயங்குபவர்களும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். சூழலியல் மீது அதிக அளவு கவனம் செலுத்தாமல் விட்டதின் விளைவு, கடல் மட்டம் அதிகரிப்பு, வெப்பம் அதிகரிப்பு, காற்று மாசு என்று அனைத்து துறைகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் தயாரித்து, அதை அமல்படுத்துவதான் சரியாக இருக்கும். இந்த காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டங்களில் மன நலத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனிதர்களின் மன நலனை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளுவதில் சுற்றுச்சூழலுக்குதான் அதிக பங்கு உள்ளது. எனவே, கால நிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டங்களில் மனநலம் தொடர்பானவற்றைச் சேர்ப்பதை இனியும் புறக்கணிக்க முடியாது.
ஸ்டாக்ஹோம் 50+
கரோனா தொற்றுக்குப் பிறகு சுகாதாரத்தை மீட்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம், ஐ.நா சபையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஸ்வீடன் நகரின் ஸ்டாக்ஹோம் நகரில் 2 நாட்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பாக சுற்றுச்சூழல் சார்ந்து மனிதர்களின் உடல் நலம் மற்றும் மன நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் 6 பிரிவுகளில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான வாக்குறுதி அறிக்கையும் வெளியிடப்பட்டது.
காலநிலை மாற்றம்
ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில், காலநிலை மாற்றம் உடல் நலன் மற்றும் மன நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மன உளைச்சல், தூக்கமின்மை, கவலை, தற்கொலை, மனச் சேர்வு உள்ளிட்ட மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு எடுத்த ஆய்வின்படி 95 நாடுகளில் 9 நாடுகள் மட்டுமே தங்களின் காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டங்களில் மன நலத்தை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
4 திட்டங்கள்?
காலநிலை மாற்ற அச்சுறுத்தலில் மன நலத்தை சேர்ந்து கட்டாயம் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. அவை:
> காலநிலை மாற்ற செயல் திட்டங்களில் மன நலத்தை சேர்க்க வேண்டும்
> ஒருங்கிணைந்த மன நலம் சிகிச்சை வழங்க வேண்டும்
> சமூகங்களின் அடிப்படையில் திட்டங்களை உருவாக்க வேண்டும்
> மன நலம் தொடர்பான திட்டங்களுக்கு அதிக நிதி உதவி அளிக்க வேண்டும்
இவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி, ஒருங்கிணைப்பு கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு, சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி, அவரச கால திட்டம், நிதி உதவி, காலநிலை மாற்ற திட்டங்களுடன் இணைந்த சுகாதார திட்டம், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிவற்றில் உலக நாடுகள் செயல்பட வேண்டும என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் காரணிகளால் உலக அளவில் 10 லட்சம் பேர் மன நலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மன நலம் தொடர்பான திட்டங்களுக்கு அதிக அளவு முக்கியதுவம் கொடுத்த காலத்தின் கட்டாயம்.