பல்லுயிர்ச் சூழலை மீட்டெடுக்கும் வகையில், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் அந்நிய களைச் செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கற்பூரம், சீகை, பைன் உள்ளிட்ட அந்நிய நாட்டு தாவர இனங்களை அகற்றி, உள்ளூர் தாவர இனங்கள் வளரும் வகையில் இந்த மண்ணுக்குரிய பல்லுயிர்ச்சூழலை மீட்டெடுக்க வேண்டுமென, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்திலுள்ள அந்நிய நாட்டு களைச்செடிகள் முழுவதையும் அகற்ற வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவால், 150 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நீலகிரி மீட்டெடுக்கப்படும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட தீர்ப்பின்படி, முதுமலை புலிகள்காப்பகத்திலுள்ள அந்நிய களைச்செடிகள் மட்டும் அகற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால், சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதுமலை மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்அந்நிய மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலர் கே.ஜே.ராஜு கூறும்போது, "உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தெங்குமரஹாடாவில் வசிக்கும் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கப்படும். கொடைக்கானல், தருமபுரி, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் அந்நிய தாவர இனங்கள் அகற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் முதுமலையில் மட்டுமே அந்நிய களைச்செடிகள் அகற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. கோத்தகிரியிலுள்ள லாங்வுட் சோலையின் மேற்பகுதியிலுள்ள எட்டு ஏக்கர் பரப்பில் வளர்ந்துள்ள குப்ரஸ் எனப்படும் சாம்பிராணி மர வகைகள் மிக வேகமாக உள்ளூர்மரவகைகள் உள்ள பகுதியில் ஊடுருவி அவற்றை அழித்து வருகின்றன. அந்நிய மர வகைகளை அகற்றினால், அந்த இடத்தில் மண்ணில் விதைகள் தானாகவே உயிர்த்தெழுந்து சோலைக்காடுகள் உருவாகும் என, 20 ஆண்டுகளுக்கு முன்பே லாங்வுட் சோலை பாதுகாப்புக் குழு நிரூபித்துள்ளது.
மேலும், ஒரு ஹெக்டேர் சோலைக்காடு ஒரு விநாடிக்கு 750லிட்டர் தண்ணீரை உருவாக்கி நீர்வளத்தை பெருக்கும். ஆண்டுக்கு 17 மில்லியன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொண்டு புவி வெப்பத்தை குறைக்கும். லாங்வுட் சோலையிலுள்ள அந்நிய மரங்களை ஒரு பரிசோதனை அடிப்படையிலாவது அகற்ற வேண்டும். இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கும், சுற்றுச் சூழல் துறையின் கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியாசாஹுக்கும் கவன ஈர்ப்பு மனு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
மாவட்ட வனப் பாதுகாவலரும், புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கள இயக்குநருமான வெங்கடேஷ் கூறும்போது, "700 ஹெக்டேரில் களைச்செடிகளை அகற்றுவது என்பது ஒரு முன்னோடி பணி. சீகை, பைன், கற்பூரம் ஆகிய அந்நிய மரங்களும் அடங்கும். இதில் அதிகளவில் சீகை மரங்கள் உள்ளன’’ என்றார்.