சுற்றுச்சூழல்

காவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல் அமைப்புகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஜக்கி வாசுதேவின் ’காவிரி கூக்குரல்’ பிரச்சாரத்துக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறும்படி நடிகர் டி காப்ரியோவை சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

காவிரியில் கடந்த 50 ஆண்டுகளில், வழக்கமாக வரும் நீர் அளவை விட தற்போது 40 சதவீதம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், தமிழகத்தில் காவிரி வடிநிலமாக உள்ள 18 மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பசுமைப் பரப்பில் 87 சதவீதம் இப்போது இல்லை. இந்த பசுமைப் பரப்பை மீட்டெடுத்து, காவிரியை மீண்டும் வற்றாத ஜீவநதியாக மாற்றும் நோக்கத்தில், ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை தொடங்கியுள்ளது.

இந்த இயக்கம் மூலம், காவிரி வடிநிலப் பகுதியில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜக்கி வாசுதேவின் இவ்வியக்கத்தில் நடிகர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜக்கி வாசுதேவின் ’காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி காப்ரியோ ஆதரவு அளித்தார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு ஒன்றையும் டி காப்ரியோ பதிவிட்டார்.

இந்நிலையில் ஜக்கி வாசுதேவின் ’காவிரி கூக்குரல்’ பிரச்சாரத்திற்கு டி காப்ரியோ அளித்த ஆதரவை பரிசீலனை செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச் சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் குழு ஒன்று அவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. மேலும் அக்கடித்ததில் மரங்களை நடுவது ஆற்றைக் காக்க உதவாது என்றும் மாறாக சுற்றுச் சூழலில் மோசமான விளைவுகளே ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்கு ஈஷா நிறுவனம் சார்பாக பதிலடி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம், ”பிரச்சாரத்தை எதிர்த்து டி காப்ரியோவுக்கு சமீபத்தில் எழுதப்பட்ட கடிதம் விளம்பரத்திற்காக எழுதப்பட்டது. அந்தக் கடித்ததில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்பட்டமான பொய்களையும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளையும் அக்கடிதம் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT