மயிலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் பட்டாசு குப்பை அகற்றப்படும் பணியை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று பார்வையிட்டார். உடன் மாநகராட்சி உயர் அதிகாரிகள். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: மாநகரில் தீபாவளியின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் உருவான 406 டன் கழிவுகளை மாநகராட்சி அகற்றியுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின்போது நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது சிறு சாரல் மழையும் பெய்து ரம்மியமான சூழலை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொதுமக்கள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுமதிக்கப்பட்ட 2 மணி நேரத்தையும் தாண்டி, இரவு 12 மணி வரை ஓயாது வீதிகளிலும், வீடுகளின் மொட்டை மாடிகளிலும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இதனால் உருவான நச்சுக் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தேனாம்பேட்டையில் நடைபெற்ற பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், தீபாவளி பண்டிகையின் போது உருவாகும் பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் தனியாகப் பிரித்து, அதற்கென வழங்கப்பட்டுள்ள தனிப்பைகளில் சேகரித்து, தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும், பொதுமக்களிடையே இதற்கான ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நேற்று பகல் 12 மணி வரை மாநக ரம் முழுவதும் சுமார் 406 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், வரும் நாட்களில் மேலும் சுமார் 200 டன் அகற்ற மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்பணிக்காக, கூடுதலாக 600 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 350 வாகனங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
மேலும், பட்டாசுக் கழிவுகளைத் தனியாக சேகரிப்பதற்காகத் தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30 ஆயிரம் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகள், அறிவியல் பூர்வமாக, பாதுகாப்பான முறையில் சுத்திகரித்து அகற்றுவதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக செயலாக்க மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.