கொடைக்கானல்: கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர்வீர் ஹென்றி லெவின்ஜ் 207-வது பிறந்தநாள் சனிக்கிழமை (நவ.28) உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ளது நட்சத்திர வடிவிலான ஏரி.
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பழநி அருகேயுள்ள கோடைகால நீர்த்தேக்கத்துக்கு செல்கிறது. இந்த நட்சத்திர ஏரியை உருவாக்கியவர், 1864-ம் ஆண்டு மதுரை ஆட்சியராக இருந்த சர்வீர் ஹென்றி லெவின்ஜ். இவர் கொடைக்கானல் வில்பட்டி கிராம மக்களின் மேய்ச்சல் நிலமாக இருந்த ஓடையை மறித்து, நட்சத்திர ஏரியை உருவாக்கினார்.
தற்போது கொடைக்கானலின் இதயமாக இருக்கிறது நட்சத்திர ஏரி. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்யவும், ஏரியைச் சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செய்யவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சர்வீர் ஹென்றி லெவின்ஜ் சிறிது காலம் கொடைக்கானலில் வசித்து வந்தார். அவரது கடைசி காலத்தில் அயர்லாந்து சென்று அங்கேயே காலமானார். கடந்த 1819 நவ.28-ம் தேதி பிறந்தார்.
அவரது 207-வது பிறந்தநாளை சனிக்கிழமை (நவ.28) கொடைக்கானல் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோலாகலமாக கொண்டாடினர். அவரது நினைவாக நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள நினைவுத் தூண் மற்றும் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.