சுற்றுச்சூழல்

படிப்போம் பகிர்வோம்: இயற்கை தரும் தரிசனங்கள்

சு.தியடோர் பாஸ்கரன்

நாய்களைப் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கான்ராட் லாரன்ஸ் எழுதிய ‘Man Meets Dog’ (1954) கையில் கிடைத்தது; அதைப் படித்தபின் அவருடைய எழுத்தின் மீதும் சிந்தனைகள் மீதும் பெரும் ஈர்ப்பு உண்டானது.

ஆஸ்திரிய நாட்டில் பிறந்து கான்ராட் லாரன்ஸ் (1903-1989) ஒரு உயிரியலாளராகப் பெயர் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் போர் கைதியாக ரஷ்யாவில் இருந்தார். பின்னர் டான்யூப் நதிக்கரையில் உள்ள தனது பண்ணையில் கூஸ் வாத்துகளை வளர்த்து, ஆராய்ந்து கண்டறிந்த முடிவுகளுக்காக நடத்தையியலில் நோபல் பரிசு பெற்றார்.

முட்டையிலிருந்து பொரித்து வெளிவந்து வாத்துக் குஞ்சு யாரை முதன்முதலில் பார்க்கிறதோ, அதைத் தாயாக அறிந்து தொடர்ந்து செல்வதைக் கவனித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மனிதரின் நடத்தை பற்றிப் பல புரிதல்களை நமக்கு அளித்து உதவியது. அவரைப் பற்றிய ஒளிப்படங்கள் பல, கூஸ் வாத்துக் குஞ்சுகளுடன் அவர் இருப்பதை காட்டுபவை.

இயற்கையிலிருந்து விலகாத வாழ்வு

அறிவியல் அடிப்படையில் ஆனால் அறிவியலைத் தாண்டி, இவ்வுலகில் மனிதரின் வாழ்வு, அவர்தம் இடம் ஆகியவற்றைப் பற்றி எழுதினார். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அவருடைய நூல்கள் அனைத்துமே உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது படைப்புகளில் எனக்குப் பிடித்தது ‘On Life and Living’. இந்த நூலைப் படித்தபோது இயற்கை மீதும் வாழ்வின் மீதும் நான் கொண்டிருந்த நிலைப்பாடுகள் வலுப்பட்டன.

பல அறிவியல் கருதுகோள்களையும் நமது இருப்பு பற்றிய அவதானிப்புகளையும் எளிய மொழியில் அவர் எழுதி விளக்குகிறார். நமது காலத்தில் வாழ்வின் ஒரு முக்கியப் பிரச்சினை என்னவென்றால் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் ஜீவனற்ற, செயற்கையான உபகரணங்களைத்தான் அதிகமாகக் கையாளுகிறார்கள். அவை அழகற்றவை மட்டுமல்ல. பரவசத்தையும் மரியாதையையும் தூண்டுபவை அல்ல.

பெருவாரியான மக்கள் நகரங்களுள் அடைபட்டு வாழ்கிறார்கள். ஆகவே, இயற்கையிடமிருந்து அந்நியப்பட்டு, அதை நேசிக்க முடியாமல் இருக்கிறார்கள். இயற்கையுடன் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாததால், புறவுலகை எதிர்கொள்ளும் இயல்பை இழந்துவிடுகிறார்கள்.

சிறுவயது முதலே இயற்கையுடனும் மற்ற உயிர்களுடன் தொடர்புகொண்டிருக்கும் மக்கள் மனநிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ முடிகிறது என்று கான்ராட் நம்பினார். இசை, இலக்கியம், கலை போன்ற மற்ற துறைகளிலும் அவர்கள் நுண்ணுணர்வுடன் ஈடுபாடு கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

களப் போராளி

அணு ஆயுதங்களுக்கு எதிராக மட்டுமல்ல அணுவாற்றலுக்கு எதிராகவும் அவரது நிலைப்பாடு இருந்தது. அவரது நாடான ஆஸ்திரியாவில் அணு உலை ஒன்றை அரசு நிறுவிக்கொண்டிருந்தபோது, எதிர்ப்பு எழுந்தது. கான்ராடும் அதை எதிர்த்தார்.

அணுவாற்றல் கிடைத்தால் மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொழில்கள் தோன்றும் என்பது அவரது வாதம். மக்களிடையே இது பற்றிப் பொது வாக்கெடுப்பு ஒன்றை அரசு நடத்தியது. வாக்கெடுப்பு அணுவாற்றலுக்கு எதிராக இருந்ததால், அது நிறுவப்படவில்லை. இன்று அணு உலை இல்லாத நாடு எனும் பெருமையுடன் ஆஸ்திரியா திகழ்கிறது.

அவரைப் போலவே காட்டுயிர், இயற்கையைப் பற்றி எழுதும்போது அந்தப் புள்ளியில் தொடங்கி மானிடரின் இருப்பு பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலை உருவாக்க முயன்ற சில எழுத்தாளர்கள் உண்டு.

 ‘Small is Beautiful’ நூலை எழுதிய ஷூமாக்கரும் இந்த வகைச் சிந்தனையாளரே. இயற்கைக்கும் நம் வாழ்க்கைக்குமான பிணைப்பு அறுபடாமல் இருக்க வேண்டியது மனநலத்துக்கு அவசியம் என்கிறார்கள் இவர்கள்.

புறவுலகு மீதான ஈடுபாடு

தமிழ் மரபில் இத்தகைய பிணைப்பு இருந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சங்கப் பாடல்களில் செடிகொடிகள், பறவைகள், உயிரினங்களைப் பற்றிய துல்லியமான அவதானிப்புகளைப் படிக்கும்போது, தற்காலத் தமிழில் அவை இல்லாதது புலப்படுகிறது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலைப் பாருங்கள்.

பதிமூன்று வரிப் பாடலில் இயற்கை சார்ந்த, ரத்தின சுருக்கமான எத்தனை படிமங்கள்? தமிழ் இலக்கிய மரபில், ஏதோ ஒரு காலகட்டத்தில் புற உலகுக்கும் நமக்கும் இருந்த மரபுப் பிணைப்பு முறிபட்டுப் போய்விட்டது என்று தோன்றுகிறது .

சுற்றுச்சுழல் பற்றிய அக்கறையை மனிதருக்கு ஊட்ட வேண்டுமானால் அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே இயற்கையின் நெருக்கத்தை அனுபவிக்க வைக்க வேண்டும்; மற்ற உயிரினங்களுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்க வேண்டும்; புறவுலகு மீது ஈடுபாடு இருக்க வேண்டும் என்பதே கான்ராட் லாரன்சின் எழுத்துகளின் சாரம்.

கட்டுரையாளர்,

சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு:

theodorebaskaran@gmail.com

SCROLL FOR NEXT