பருவநிலை மாற்றம் தொடர்பான 24-வது சந்திப்பு போலந்து நாட்டின் கட்டோவிஸ் நகரத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம் போல, புவி வெப்பமயமாதலைக் குறைப்பதற்கு வளர்ந்த நாடுகள் எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை என்று ஒரு சாராரும், ‘பாரிஸ் ஒப்பந்தத்தை’ நிறைவேற்றும் முயற்சியில் சில படிகள் முன்னேறியிருக்கிறோம் என்று ஒரு சாராரும் பேசி வருகின்றனர்.
அது ஒருபுறம் இருக்கட்டும். புவி வெப்பமயமாதலைக் குறைக்க, நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை விடுங்கள். தனி நபராக நாம் ஒவ்வொருவரும் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.?
யோசித்துப் பார்த்தால், நமது வீடுகளில் எல்.இ.டி. பல்புகளை மாட்டியதைத் தவிர, நாம் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்பது புலப்படும்.
கார்பனைக் குறைக்கும் வழி
இந்நிலையில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் வாகனங்களுக்குப் பதிலாக, போக்குவரத்துக்காக மிதிவண்டிகளைப் பயன்படுத்தினால், நகரப் போக்குவரத்தால் வெளியாகும் பசுங்குடில் வாயுக்களைச் சுமார் 40 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும். அதனால் புவி வெப்பமயமாதலை ஓரளவு குறைக்க முடியும்’ என்கிறார் சேலம் பெரியார் பல்லைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக உயிரி எரிசக்தித் துறைப் பேராசிரியருமான முத்துச்செழியன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் மட்டும் சுமார் 22 சதவீத அளவுக்கு கரியமில வாயு வெளியாகிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்தால் 2030 வரை மேற்சொன்ன அளவு 57 சதவீதமாக அதிகரிக்க சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது” என்கிறார்.
உயர்ந்து வரும் வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபடுதல் போன்ற இடர்ப்பாடுகளும் ஏற்படுகின்றன. காற்று மாசுபாடு, மக்களின் உடல்நலத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல் நகரத்தின் எழிலையும் சீரழிக்கிறது.
பெரு நகரங்களில் அதிகரிக்கும் சொகுசு வாகனங்களின் பயன்பாட்டால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. இதைச் சரி செய்வது மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
நிலையான போக்குவரத்துக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தி, மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் போக்குவரத்துக்காக மிதிவண்டிகள் பயன்படுவதால் அங்குள்ள நகரங்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் உள்ளன.
இதனால் அந்நாடுகள் வெளியிடும் பசுங்குடில் வாயுக்களின் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. மிதிவண்டியால் உடல்நலத்துக்கு நன்மை ஏற்படுவதுடன், ஏழை, எளிய மக்களும் சாலைகளில் எந்த ஒரு நெரிசலுக்கும் உள்ளாகாமல் செல்வதற்கான உரிமையும் சுதந்திரமும் கிடைக்கிறது.
உடலுக்கும் ஊருக்கும் நல்லது!
“2007-ம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பாக, ‘இண்டர் கவர்மெண்ட்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச்’ எனும் ஐ.பி.சி.சி. அமைப்பு வெளியிட்ட நான்காவது அறிக்கையில் ‘மிதிவண்டியை 1 முதல் 10 சதவீதம் வரை போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நகரத்தின் பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டின் அளவைச் சுமார் 8.4 சதவீதமாகக் குறைக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால், மோட்டார் வாகன உற்பத்தி குறையும். அல்லது, குறைந்த அளவே கரியமில வாயு வெளியாகும்படியான வாகனங்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கும்.
அப்படிச் செய்தால் மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் சுமார் நூறு டன் கரியமில வாயு வெளியீட்டிலிருந்து பூமி தப்பிக்கும். காற்று மாசு, சுகாதாரச் சீர்கேட்டை உண்டாக்குவதோடு பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். அதனால் மனிதர்களின் உற்பத்தித் திறனும், வாழ்க்கைத் தரமும் குறையும்.
மிதிவண்டியை ஓட்டுவதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி தசைகள் வலுப்பெறவும், கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையவும் உதவுகிறது. மிதிவண்டி ஓட்டுவதால் ஒரு மணி நேரத்தில் சுமார் 300 கலோரிகள் வரை எரிக்க முடியும். நீரிழிவு, மாரடைப்பு போன்ற பல நோய்கள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். எரிபொருள் தேவை குறையும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறிக்கொண்டே போவதால் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற, இத்தகைய மாற்று வழிகளைக் கொள்கை அளவில் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்” என்றார் முத்துச்செழியன்.
பிறகென்ன… பெடல் போடலாமே..!
சைக்கிள்… சில தகவல்கள்..! > பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மிதிவண்டியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவை பொழுதுபோக்கு, வேலை, ராணுவம், கலைநிகழ்ச்சி, விளையாட்டு எனப் பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. > ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் பெரும்பாலும் மிதிவண்டியைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளைவிட சீனாவில்தான் அதிக எண்ணிக்கையில் மிதிவண்டிகள் பயன்பாட்டில் உள்ளன. சீனாவை அடுத்து பிரான்ஸ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் மிதிவண்டிகள் உள்ளன. > உலகம் முழுவதும் ஆண்டுக்குச் சுமார் 10 கோடி மிதிவண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. > உலக அளவில் சுமார் 6 மைல் தூரத்தை மிதிவண்டியிலேயே பயணம் செய்து கழிக்கிறார்கள் மக்கள். அவர்களில் பெரும்பாலானோர் சீனா, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் பொழுதுபோக்குக்காக மட்டுமே மிதிவண்டியைப் பயன்படுத்துகிறார்கள். > டச்சு மக்கள் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 100 கோடி யூரோக்களை மிதிவண்டிகளை வாங்குவதற்காகவே செலவிடுகின்றனர். > நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டெர்டாம், உலகிலேயே மிதிவண்டியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய நகரமாகும். இங்கு சுமார் 400 கி.மீ. நீளத்துக்கு சைக்கிள் ஓட்டும் பாதைகள் உள்ளன. > கடந்த பத்தாண்டுகளில் மிதிவண்டி உற்பத்தியானது சுமார் 13 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் மிதிவண்டி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு சீனத் தயாரிப்பாக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் இந்தியா, ஐரோப்பா, தைவான், இந்தோனேசியா மற்றும் பிரேசில் நாடுகள் உள்ளன. |