முன்பு வட்டாரச் சமுதாயங்களின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டுப் பகுதிகளின் மேல், அரசு மரக்கட்டை உற்பத்தியைத் திணித்தபோதுதான் அது இந்திய மக்களின் தினசரி வாழ்க்கையில், அதுவரை காணப்படாத அளவுக்கு இடையூறை ஏற்படுத்தியது. முதலாவதாக, 1800-ம் ஆண்டு முதல் இந்தியாவின் 20 சதவீத நிலப்பரப்பு வனத்துறையால் கையகப்படுத்தப்பட்டதால் இந்தியாவில் ஏறத்தாழ ஒவ்வொரு கிராமமும் பாதிக்கப்பட்டது.
இரண்டாவதாக, காலனி அரசு சொத்துரிமைகளை மறுவரையறை செய்தது. பழங்குடி மக்கள் சமுதாயங்களின் காட்டு பயன்பாடு சார்ந்த சொத்துரிமைகள் குறைக்கப்பட்டன அல்லது நீக்கப்பட்டன.
மூன்றாவதாக, இந்தியாவில் கலப்புக் காடுகளின் சிற்றினக் கூறமைப்பு பெருமளவுக்கு மாற்றப்படத் திட்டமிடப்பட்டு ஒரு சில குறிப்பிட்ட சிற்றின மரங்கள் மட்டுமே உள்ள பகுதிகளாக இருக்கும்படி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
உதாரணத்துக்கு, மரவியல் தொழில்நுட்பங்கள் இமாலயப் பகுதியின் கலப்பு கோனிஃபெர் தாவரக் காடுகளை வெறும் கோனிஃபெர் மரக்காடுகளாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த மிகவும் வளமான பசுமை இலைக் காடுகளை வெறும் தேக்கு மரக்காடுகளாகவும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் வெற்றியும் பெறப்பட்டது.
கால்நடைகளுக்குத் தனிக் காடுகள்
காட்டுச் சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட இத்தகைய மாற்றங்கள், நீண்ட கால அடிப்படையில், எளிதில் கட்புலனாகாத விளைவை மண், நீர், காற்றுச் சூழல்களின் மேல் ஏற்படுத்தின. இது காட்டைச் சுற்றி அமைந்திருந்த கிராமங்களின் நிலத்துக்கு உடனடி எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. ஏனெனில், ஒரே ஒரு மரச் சிற்றினத்தின் இருப்பைவிடப் பல மரச் சிற்றினங்களின் இருப்பு முறைப்படுத்தப்பட்ட காட்டியலின் பல்வேறு இலக்குகளை நன்கு எதிர்கொள்ள உதவும்.
காலனி ஆதிக்க வனத்துறை அதிகாரிகளால் பெரிதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பைன், தேவதாரு, தேக்கு போன்ற மரச் சிற்றினங்கள் கிராமப்புற, பழங்குடி மக்கள்தொகைக்கு அதிக பயனளிப்பதில்லை. மாறாக, எந்த மரச் சிற்றினங்கள் நீக்கப்பட்டனவோ அவை விறகு, கால்நடைத் தீவனம், சிறு மரக்கட்டைகள் போன்றவற்றுக்காக மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
பழங்குடி மக்களின் தேவைகளைக் காடுகள் அதிக அளவில் நேரடியாக ஈடுகட்ட வேண்டும் என்பதற்காக வோல்க்கெர் போன்ற அறிஞர்கள் விறகு, கால்நடைத் தீவனங்கள் போன்றவற்றுக்குத் தனி காட்டுப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதனால் பெறப்படும் நிலவரி அந்தக் காட்டுப் பகுதிகளில் வணிகரீதியான மரக்கட்டை எடுப்பதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டிவிடும் என்றும் வலியுறுத்தினர்.
விளைபொருளான மரக்கட்டை
அதே காலகட்ட வல்லுநர்களின் எழுத்துகள் மேலும் ஒன்றையும் வலியுறுத்தின: காட்டு மூலப் பொருட்களைச் சுரண்டுவதிலும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள கடுமைத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் அரசின் காட்டியல் செயல்பாடுகள் சாதாரண மக்களின் உயிர் வாழத் தேவையான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், வேளாண்மை ஆகியவற்றின் சூழல் சார்ந்த அடிப்படையை அதிகமாகக் குறைக்கின்றன.
காடுகளை, அரசு கைவசப்படுத்திக் கொள்வதற்கு முன்பு காட்டு உற்பத்திப் பொருட்களின் வணிகரீதியான பயன்பாடு மிளகு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தந்தம், ஒரு சில மூலிகைகள் போன்றவையாகவே இருந்தது.
இவற்றைக் காட்டிலிருந்து பெறுவது காட்டின் சூழல் நிலையையோ வணிகப் பயன்பாட்டையோ மிகவும் மோசமாகப் பாதிப்படையச் செய்யவில்லை. மரக்கட்டை எப்போது ஒரு முக்கிய காட்டு விளைபொருளாக மாறியதோ, அப்போதுதான் காட்டின் அறுவடைப் பாங்குகளிலும் பயன்பாட்டிலும் அளவு-சார் மாற்றம் ஏற்பட வழிவகுக்கப்பட்டது.
(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in