1730-ம் ஆண்டு, அதாவது, குரு ஜம்போஜியின் 29 நெறிமுறைகளும் பதிவு செய்யப்பட்டு சுமார் 300 ஆண்டுகள் கழிந்த பின், ஜோத்பூரின் மகாராஜாவான அபய் சிங், ஒரு புதிய அரண்மனையைக் கட்ட முடிவு செய்து, அதற்கான செங்கற்களை உற்பத்தி செய்யும் சூளைக்குத் தேவையான விறகுகளை, விஷ்னோய்கள் வாழ்ந்த பகுதிகளின் கேஜ்ரி மரங்களை வெட்டிப் பெற முயன்றார்.
இதற்காகப் படை வீரர்களை ஜோத்பூரிலிருந்து 26 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த ஜேக்னாட் (இன்று, கேஜ்ரி) என்ற கிராமப்புறக் காட்டுக்கு அனுப்பினார். இந்த இடத்தில் விஷ்னோய் மக்கள் கேஜ்ரி மரங்களை அதிக எண்ணிக்கையில் பேணி வளர்த்திருந்தனர். அரசரின் படை வீரர்கள் கேஜ்ரி மரங்களை வெட்ட முயற்சி செய்தபோது, விஷ்னோய்கள் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பையும் மீறி அரசரின் ஆணையை நிறைவேற்றுவதற்காகப் படை வீரர்கள் மரங்களை வெட்ட முயன்றனர்.
மரத்துக்கே அதிக மதிப்பு
அப்போது, மரங்கள் வெட்டப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அம்ரிதா தேவி என்ற பெண்ணும் அவருடைய மகளும் அந்த மரங்களைப் பாதுகாக்க அவற்றைக் கட்டித் தழுவிக் கொண்டனர். ‘வெட்டப்படும் ஒரு தலையை விட, வெட்டப்படும் ஒரு மரம் அதிக மதிப்பு உடையது’ என்று முழங்கினார் அம்ரிதா தேவி. அதைப் பார்த்த கிராம மக்களும் அப்படியே செய்தனர். அவர்களில் பலரது தலைகள் வெட்டப்பட்டன.
அவர்களுடைய துணை மதத்தின் 14-வது நெறிமுறையின்படி, ஒவ்வொரு விஷ்னோயும் அவரது உயிர் போனாலும், பச்சை மரத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுதான் இந்த மரத்தழுவல் செயலுக்குக் காரணம். இந்தத் தன்னிச்சையான தியாக உணர்வில், 363 விஷ்னோய்கள் கொல்லப்பட்டனர். அந்தச் சடலங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்பட்டன. அந்த இடத்தில் நான்கு தூண்கள் கொண்ட ஒரு எளிய கல்லறை கட்டப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 13-ம் தேதியன்று விஷ்னோய் மக்கள் இந்தக் கல்லறை அருகே ஒன்று திரண்டு அவர்களுடைய தியாகத்தைப் போற்றி வணங்குகின்றனர்.
உயிர்த் தியாகம் வீண்தானா?
விஷ்னோய் மக்களின் உயிர்த் தியாகம் பற்றிய செய்தி ஜோத்பூர் அரசரை அடைந்தவுடன், அவர் இந்த கிராமத்துக்கு விரைந்து வந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மரம் வெட்டுதலை நிறுத்தினார். பிறகு விஷ்னோய் பகுதியை, பாதுகாக்கப்பட்ட சூழல் பகுதியாக அறிவித்தார். மரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஊறு விளைவிக்கும் செயலுக்கும் தடைவிதித்தார். இந்தச் சட்டம் இந்தப் பகுதியில் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
வெட்டப்பட்டு இறந்துபோன 363 விஷ்னோய்களின் நினைவைப் போற்றும் வகையில் பல கேஜ்ரி மரங்கள் அந்தப் பகுதி முழுவதும் நடப்பட்டன. ராஜஸ்தான் அரசால், காட்டுயிர்ப் பாதுகாப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு, அமிர்தா தேவியின் பெயரால், ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. விஷ்னோய்களின் தியாகம், ‘சிப்கோ’ இயக்கத்துக்கு ஓர் உந்துவிசையாகச் செயல்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
2015-ல், மத்திய வறண்ட மண்டல ஆய்வு நிறுவனம், ராஜஸ்தானின் 12 வறண்ட மாவட்டங்களில், ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள கேஜ்ரி மரங்களின் எண்ணிக்கை, 35 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ந்துவிட்டது என்று அறிக்கை வெளியிட்டது. அதைக் கேட்கும்போது, சூழல் பாதுகாப்புக்காக விஷ்னோய்கள் செய்த உயிர்த்தியாகம் பயனற்றதாக மாறி வருகிறதோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.
(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in