பெலெம்: பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு பிரேசிலின் பெலெம் நகரில் நேற்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை என்றாலும், அமேசான் காடுகளை அழிவில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.
ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சிஓபி30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் வரும் 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக உலக தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு நேற்று தொடங்கி 2 நாட் கள் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பல நாடுளைச் சேர்ந்த 53 தலைவர்கள், அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்ற சவால்கள் குறித்து ஆலோசிக்கின்றனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் இதில் பங்கேற்கிறார். ஆனால் உலகளவில் அதிக மாசுகளை உற்பத்தி செய்யும், சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற அன்றே, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் எந்த மூத்த அதிகாரிகளையும் இந்த மாநாட்டுக்கு அனுப்பமாட்டார். பருவநிலை மாற்ற நடவடிக்கையில் முன்பு அமெரிக்கா முக்கிய பங்காற்றியது. கார்பன் கழிவுகளை அதிகமாக வெளியேற்றும் சீனாவை அமெரிக்கா கட்டுப்படுத்தியது. ஏழை நாடுகளுக்கு நிதி திரட்டி கொடுக்கவும் உதவியாக இருந்தது. தற்போது இதில் அமெரிக்கா பங்கேற்காதது, பருவநிலை மாற்ற அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தும் என பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள், புவி வெப்பமாவதற்கு காரணமான கார்பன்-டை ஆக்சைடு வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் காடுகள் கடந்த 50 ஆண்டுகளில் 17 சதவீதம் அழிந்துவிட்டது. காடுகள் விளைநிலங்களாகவும், சுரங்கங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயும் அமேசான் காடுகளை அழிக்கிறது.
பிரேசிலில் தற்போது நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில், அமேசான் காடுகள் அழிவதை தடுக்கவும், பருவநிலை மாற்றத்தின் இதர முக்கியமான இலக்குகளை எட்டவும் போதிய நிதியை உருவாக்க வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களிடம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா வேண்டுகோள் விடுக்கவுள்ளார். இந்தாண்டு சிஓபி30 மாநாடு, இதற்கு முந்தைய கூட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கான அமல்படுத்துவதற்கான நிதியை பெற்று தரும் என நம்பப்படுகிறது.