குமுளி: ஐயப்ப பக்தர்கள் பம்பையில் ஈர ஆடைகளை விட்டுச் செல்வதால் ஆறு மாசுபடும் நிலை உள்ளது. ஆகவே மண்டல காலத்துக்கு வரும் பக்தர்கள் இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ளது. இதற்காக 16-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டு டிச.27-ம் தேதி வரை தொடர் வழிபாடுகள் நடைபெற உள்ளன.
பின்பு மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் டிச.30-ல் தொடங்கி ஜன. 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு மாதவழிபாட்டில் லட்சக்கணக் கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவர். இந்நிலையில் மண்டல வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்படும். பல மொழிகளில் ஒலிபெருக்கி அறிவிப்புகளும் இருக்கும். வழி தவறிய குழந்தைகளை எளிதில் மீட்க அவர்கள் கையில் க்யூஆர் கோடுடன் கூடிய கைப்பட்டை அணிவிக்கப்படும்.
இந்த ஆண்டும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் தனி வரிசை ஏற்படுத்தப்படும்.வனப்பகுதியில் பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபடவும், சமைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது. பம்பை முதல் சந்நிதானம் வரையிலான 7 கி.மீ. தூரத்துக்கு ‘பம்பா தீர்த்தம்’ என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப் படும். முன்பதிவு செய்துவிட்டு வரமுடியாத பக்தர்கள் தங்கள் பதிவை ரத்துசெய்ய வேண்டும்.
அப்போதுதான் ஸ்பாட் புக்கிங் மூலம் மற்ற பக்தர்கள் பலன் அடைய முடியும். பம்பையில் பக்தர்கள் ஆடைகளை விட்டுச் செல்வதால் ஆறு மாசுபடும் நிலை உள்ளது. இவற்றை அகற்றவும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து எந்த ஐதீகமும் இல்லை. ஆகவே, பக்தர்கள் இந்த நடைமுறையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.