வடகிழக்குப் பருவமழை முடிவடைவதற்கு முன்னதாகவே கொடைக்கானல் மலைப்பகுதியில் நீர்ப் பனிக் காலம் தொடங்கியதால், அதிகாலை நேரங்களில் பனி படர்ந்து சூரியன் உதித்த பிறகு அவை நீராவியாகச் செல்லும் ரம்மியான காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.
கொடைக்கானலுக்கு சீசன் காலங்கள் மட்டுமின்றி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளது. மழைக் காலம், பனிக் காலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காணப்படும். இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு சில வாரங்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில் , தற்போது நிலபரப்புகளில் அதிக வெயில் உள்ளது.
அதேநேரம் மலைப்பகுதியில் அதிக குளிர் உணரப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போதே நீர் பனி படரத் தொடங்கி உள்ளது. கொடைக்கானலில் இரவில் 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது.
இந்நிலையில் அதிகாலையில் செடிகள், ஏரி நீர் ஆகியவற்றின் மேல் நீர்ப் பனி படர்ந்து காணப்படுகிறது. அதிகாலை சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் நீர்ப் பனி நீராவியாக வெளியேறுகிறது. வழக்கமாக மார்கழி மாதம் தொடங்கும் முன்னதாகவே வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வரும். டிசம்பர் மாத இறுதியில் கடும் பனிப் பொழிவு இருக்கும். ஆனால் தற்போது முன்னதாக நவம்பர் தொடக்கத்திலேயே இந்த நிலை காணப்படுகிறது. இதனால் வடகிழக்குப் பருவமழை முழுமையாகத் தொடருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏரியைச் சுற்றிய பகுதிகளில் காலையில் தற்போதே பனிபடர்ந்து காணப்படுகிறது. காலையில் ஏரிச்சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் நீர்ப்பனி ஆவியாகிச் செல்லும் ரம்மியமான காட்சியை ரசிக்கின்றனர். பகலில் மிதமான வெயில், இரவில் கடும் குளிர் என கொடைக்கானலில் தட்பவெப்ப நிலை உள்ளது. காலையில் குளிர் அதிகநேரம் நீடிப்பதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் இன்றி அளவாகவே காணப்படுகிறது.